Friday, January 10, 2014

பொருளியல் அரங்கம்-தீக்கதிர்-டிசம்பர் 28, 2013


க.சுவாமிநாதன் 

 
வறுமை கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது.. அதனினும் கொடிது இளமையில் வறுமை.. இது அவ்வையார் மொழி.

குழந்தைகள் மத்தியில் வறுமை- ஜெர்மனியில் 10 சதவீதம். பிரிட்டனில் 20 சதவீதம். ருமேனியாவிலோ 33 சதவீதம். ஜெர்மனி உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. 135 டாலர் பில்லியனர்கள் (6400 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து ) உள்ள நாடாகும்.ஒரு பெற்றோர் குடும்பங்கள் (SINGLE PARENT FAMILIES ) 1996-ல் ஏழில் ஒன்றாக இருந்தது. 2009-ல் அது ஐந்தில் ஒன்றாக உயர்ந்துவிட்டது.

பெரும்பாலும் தாய்மார்கள் பராமரிப்பிலேயே குழந்தைகள் வளர்கிறார்கள். வறுமையின் சுமையையும் பெண்களே தாங்குகிற பாலின பாரபட்சத்திற்கு இது ஓர் சாட்சியம். நிறைய பேர் மேலை நாடுகளில் பாலின சமத்துவம் நிலவுவதாக நினைக் கிறார்கள்.

2011 காவல்துறை பதிவேடுகளின்படி 14 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 6.7 சதவீத மானவர்கள் கிரிமினல் நடவடிக் கைகளுக்கான வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.

சொர்க்கபுரியின் சோகம்
  
அமெரிக்காவின் வறுமை குறித்த தகவல்களை வறுமை யில் ஆழ்ந்துள்ள குழந்தைகளுக்கான தேசிய மையம்(NATIONAL CENTER FOR CHILDREN IN POVERTY) வெளியிட்டுள்ளது. 2010 அமெரிக்க நாட்டின் சென்சஸ் அடிப்படையில் இவ்விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மத்தியில் வறுமை நிலவுகிற டாப்-25 அமெரிக்க நகரங்களில் இது 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை உள்ளது.டெட்ராய்ட் நகரத்தில் 53.6 சதவீத மாக இது உள்ளது. பப்பலோ (BUFFALO) நகரத்தில் 47 சதவீதம். தேச அளவில் குழந்தை வறுமை விகிதம் 22 சதவீதமாக இருந்தது. 20 ஆண்டுகளில் இவ்வளவு அதிக மாக இச்சதவீதம் இருந்ததில்லை. 2000க்குப் பிறகே 6 சத வீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூடி யிருக்கிற வறுமை 1965-ல் இருந்த அளவுகளோடு ஒப்பிடக் கூடியதாக உள்ளது.

ஒரு கோடியே 64 லட்சம் குழந்தைகள் வறுமையில் வாழ்கிற தேசத்தில் டாப்-1 சதவீத பணக்காரர்கள் வருமானம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஊதியங்களோ 0.4 சதவீதமே அதிகரித்துள்ளது.இந்த லட்சணத்தில் நவம்பர் 1 முதல் சத்துணவு உத வித் திட்டத்தில் (SUPPLEMENTARY NUTRITIONAL ASSISTANCE PROGRAAME) 5 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. என்ன அர்த்தம்! வறுமையின் பிடி யில் உள்ள குழந்தைகளுக்கு இன்னும் சோறு குறையும் என்பதுதான்.

“இந்த சதவீதங்கள் தேசத்தின் மிகப் பெரும் வெட்கம்“ என மேற்கண்ட மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் கர்டிஸ் ஸ்கின்னர் கூறியுள்ளார். வெட்கத்தைப் பார்த் தால் கார்ப்பரேட் அமெரிக்கா லாபம் பார்க்க முடியுமா!

வறுமை வளர் நாடுகள்

அண்மையில் இந்தோனேசியா பாலியில் நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடு (W.T.O ) வளர்முக நாடுகளை, வறுமை வளர்கிற நாடுகளாக மாற்றி யிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு, வர்த்தகம் சம்பந்தப் பட்டது அல்ல. அது ஒரு நாடு தனது ஏழை மக்களின் நலனை பாதுகாப்பதற்கான உரிமை என்று இந்தியா தனது வரைவு ஆவணத்தில் கூட வலியுறுத்தி இருந்தது. ஜி 33 குழும நாடுகளும் மேலை நாடு களின் நிர்பந்தங்களை எதிர்த்து குரல் கொடுத்தன.ஆனால் கடைசியில் “சமாதான சரத்து” (PEACE  CLAUSE ) என வர்ணிக்கப்படுகிற ஒப்பந்தத்தின் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே உணவுப் பாதுகாப்பை கேள்வி யாக்குகிற அபாயத்திற்கு நிவாரணம் கிடைத் துள்ளது.

உட்டோ கூறுவது, விவசாய மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் மானியம் இருக்க முடியாது. ஆனால் பச்சைப் பெட்டி மானியம் (GREEN BOX ) என்ற பெயரில் மேலை நாடுகள் தருகிற நேரடி பணம் அளிப்பு (DIRECT CASH TRANSFER) இந்த வரம்புக்குள் வருவதில்லை. ஜி 33 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு சட் டத்தை தற் போது நிறைவேற்றியுள்ள இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடு களுக்கே இந்த நான்காண்டு கால அவகாசமும் கிடைக்கும். இனி நிறைவேற்றப் போகிற நாடுகளின் திட்டங்கள் கேள்விக்கு ஆளாகலாம். மொத்தத்தில் உரிமை என்று இந்திய அரசே முழங்கிய உணவுப் பாதுகாப்பு, வர்த்தக பேரத்தின் வரம் பிற்குள் வந்துவிட்டது.

கொசுறு

*அந்நிய முதலீட்டு பங்குகளைக் கொண்ட 766 தனி யார் இந்திய நிறுவனங்களின் 2011-12 ம் ஆண்டின் நிகர லாபம் 22 சதவீதம் குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கி தணிக்கை அறிக்கை தருகிற தகவல். இந்த நிறுவனங்களில் அமெரிக்கா, பிரிட்டன்,ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த முதலீடுகள் உள்ளன.

* மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் - சிறு வணிக மெகா நிறு வனம் தனது ஊழியர்களுக்கு வழங்கி வந்த வரையறுக்கப் பட்ட பயன் கொண்ட பென்சன் (DEFINED  BENEFIT ) திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி வரையறுக்கப் பட்ட பங்களிப்புத் திட்டத்தை (DEFINED CONTRIBUTION ) அறிமுகம் செய்துள்ளது.
* 2004-2012 க்கு இடைப்பட்ட காலத்தில் விதிமுறை மீறல்களுக்கு ஆளான எச்.எஸ்.பி.சி, மார்கன் சேஸ் உள் ளிட்ட பன்னாட்டு வங்கிகள் நிறுவனங்களுடன் 242 சமரச அபராத உடன்பாடுகளை அமெரிக்க நீதித்துறை செய்து கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளத

பொருளியல் அரங்கம்- தீக்கதிர்- ஜனவரி 4,2014


க.சுவாமிநாதன்
 
சிங்கப்பூரின்`செல்’ குடும்பங்கள்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கை தற்போதுள்ள 54 லட்சம் மக்கள் தொகையை 2030க்குள்ளாக 69 லட்சமாக உயர்த்துவதென முடிவு செய்துள்ளது, இதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை ஒவ்வொரு ஆண்டும் 15,000 லிருந்து 20,000 வரை அதிகரிப்பதெனவும் அறிவித்துள்ளது. தற்போதைய 54 லட்சம் மக்களில் 15,50,000 பேர் - அதாவது சுமார் 29 சதம் புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள்தானாம். சிங்கப்பூரின் தேசிய தனிநபர் சராசரி வருமானம் 42,930 டாலர்கள் எனில் கீழ்மட்டத் தொழிலாளர்களில் அதில் 6 ல் ஒரு பங்கையே சராசரியாக பெறுகிறார்கள். மருத்துவம், குடியிருப்பு வசதிகளெல்லாம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிக அரிது. பெரும்பாலும் தனித்து வாழும் இவர்கள் செல்போன், இன்டர்நெட் மூலமாகவே குடும்ப உறவுகளை பராமரித்துக் கொள்கிறார்கள்.

கரூர் வைஸ்யாவில் அந்நிய முதலீடு

கரூர் வைஸ்யா வங்கியில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் (குஐஐ) பங்கை 40 சதம் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. தற்போது தனியார் வங்கிகளில் 49 சதம் வரை ‘ஆட்டோமேடிக் ஒப்புதல் வழியிலும்‘ அதற்கு மேல் 74 சதம் வரை ‘அரசின் ஒப்புதல் வழியிலும்‘ அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படலாம் என்ற வரம்புகள் அமலில் இருப்பதால் அவை மீறப்படாமலிருப்பதைக் கண்காணித்துக் கொள்ளவும் கரூர் வைஸ்யா வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 சதத்திற்கும் அதிகமான அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எந்தவொரு தனியார் வங்கியிலும் பங்குகள் வாங்கினால் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தர வேண்டுமென்பது தற்போதுள்ள விதிமுறையாகும்.விருந்தாளிகள் வீட்டிற்கு சொல்லிவிட்டு வருவது போல வருகிறது அந்நிய முதலீடு.

தள்ளாடும் பங்கு சந்தை

2013ல் ஐபிஓ (INITIAL PUBLIC OFFER ) எனப்படும் கம்பெனிகளின் துவக்க பங்கு வெளியீடுகள் ரூ.1619 கோடிகளையே திரட்டியுள்ளன. இது கடந்த 12 ஆண்டுகளில் காணப்படாத பெரும் சரிவாகும்.2001ல் ரூ.296 கோடிகள் திரட்டப்பட்ட பின்னர் காணப்படும் மிகச் சோர்வான பங்குச் சந்தை ஐபிஓ திரட்டல் இது ஆகும். 2010ல் இத்தொகை ரூ.37,535 கோடிகளாகவும், 2012ல் ரூ.6835 கோடிகளாகவும் இருந்தது.இரண்டாம் நிலைச் சந்தையில் ((Secondary Market) ) நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்களிடம் ஆர்வமின்மை ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.‘ப்ரைம் டேட்டாபேஸ்’ என்ற நிறுவனம் ஐபிஓ சந்தை மீட்சியடைவதற்கான அறிகுறிகள் அண்மையில் தெரியவில்லை என கணித்துள்ளது.

வால்மார்ட்டின் கலப்படம்

உலகின் மிகப்பெரிய சில்லரை வணிக நிறுவனமான வால்மார்ட் தனது சீன கடைகளிலிருந்து ‘கழுதை’ மாமிச உணவை திரும்பப் பெறுவதென முடிவு செய்துள்ளது.சீனாவின் ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.64 லட்சம் கோடி) உணவு மற்றும் பலசரக்கு சந்தையில் ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் வால்மார்ட்டின் சந்தைப் பங்கு 7.5 சதத்தில் இருந்து 5.2 சதம் வரை விழுந்திருக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.96 லட்சம் கோடிகள்) வளரப் போகும் சீனச் சில்லரை வணிகச் சந்தையில் வால்மார்ட்டின் வாய்ப்புகளை கழுதைக் கறி விவகாரம் பாதிக்குமென செய்திகள் கூறுகின்றன.கழுதைக் கறி என்று சொல்லி வேறு பிராணிகளின் மாமிசம் கலக்கப்படுவதாக னுசூஹ சோதனையில் தெரியவந்துள்ளது.பிரான்சின் கேரிஃபோர், மெக்டோனால்டு, கேஃஎப்சி போன்ற நிறுவனங்களும் உணவுத் தர சோதனையின் சந்தேக லென்சுக்குள் வந்துள்ளனவாம்.

கொசுறு......

ஷோலே திரைப்படம்38 ஆண்டுகளுக்குப் பின்னர் 3டி படமாக வெள்ளியன்று (3.1.2014) ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.15 கோடி செலவில் வெளி வந்த மெகா பட்ஜெட் படம் 25 கோடி செலவில் தற்போது முப்பரிமாண படமாக ஆக்கப்பட்டுள்ளது.

வலிமையான பிரதமர்... விலைவாசியை என்ன செய்வார்!!


சுவாமிநாதன்
புலியின் பற்கள் வலிமையென
புள்ளி மான்கள் போற்றுவதில்லை !
பூனையின் பாய்ச்சலை
எலிகள் பாராட்டுவதில்லை!
பல்லி நகரும் லாவகத்தை
பூச்சிகள் கூட சிலாகிப்பதில்லை!
ஐந்தறிவின் உள்ளுணர்வுகளை
ஊடகங்கள் தீர்மானிப்பதில்லை!
தெரிகிறது யார் எதிரியென்று...
ஆனால்
ஏழாம், எட்டாம் அறிவும் ஏங்குகின்றன
வலிமையான பிரதமர் வேண்டுமென்று.......!!

 
இடையில் பயணத்தில் ஒரு நடுத்தர வேலைவாய்ப்பில் இருப்பவர் ஒருவரைச் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசியவுடன் வலிமையான பிரதமர் ஒருவர்தான் இன்றைக்கு நாட்டின் தேவை என்றார். அவரோடு ரொம்ப நேரம் உரையாடிய பிறகும் நான் நிற்கும் புள்ளியையும், அவர் நிற்கும் புள்ளியையும் இணைத்து ஒரு சின்னக் கோலம் கூடப் போட முடியவில்லை. ஒரு மணிநேரம் ஆன பிறகும் ஒரு சர்வாதிகாரிதான் நம்ம நாட்டுக்குப் பொருத்தமானவர் என்று அவர் கூறிய போது எதிரெதிரே அமர்ந்தாலும் ஏதோ ஒரு மைலுக்கு அப்பால் போய்விட்ட உணர்வு ஏற்பட்டது. ஆர்வத்தோடு அவருடைய முந்தைய அரசியல் சார்புகளை விசாரித்தபோது அன்னாஹசாரே, விஜயகாந்த், துக்ளக் சோ, எம்.எஸ். உதயமூர்த்தி என்று எங்கெங்கேயோ சுற்றி பின்னர்தான் அவர் நிற்கிற புள்ளி எனக்குத் தெரிந்தது. எதையோ தேடுகிற அவரது தவிப்பு புரிந்த பிறகு புள்ளிகள் நெருங்கி சிம்பிளான கோலம் ஒன்று வரைய முடிந்தது.
இந்திய அரசியலில் இரண்டே முகவர்கள்தான் ஊடகங்களின் கேமராக் கண்களுக்கு தெரிகின்றன. வலியவர் என்று குஜராத்காரரும், இளையவர் என்று குடும்ப வம்சத்து குல விளக்கும், மூன்றாவது ஃபிரேமிற்கு தேவையில்லாமல் இடித்துக் கொண்டு வீடுகளின் வரவேற்பறைகளில் காட்சியளிக்கிறார்கள். இது தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல. இரு துருவங்களாகக் காட்டப்படும் இரண்டு பேரை திரைக்குப் பின்னிருந்து இயக்குபவர்கள் வெவ்வேறானவர்கள் அல்ல என்பதுதான் அரசியல் சூட்சமம்.
இச் சூட்சமத்திற்கான முயற்சிகள் புதியவை அல்ல. 2004ல் இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஓர் மத்திய அரசு அமை வேண்டுமென்ற நிலையேற்பட்ட போது இந்தியப் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான இராகுல் பஜாஜ், காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய அரசு உருவாக வேண்டுமென்ற கருத்தை முன்மொழிந்தது நினைவில் இருக்கலாம். இந்தியாவின் பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அது தேசத்தின் நெருக்கடியாக சித்தரிப்பது அவர்களின் உத்தியில் ஒரு வகை. அவர்களின் பொருளாதார நலனுக்கு எதிரான மாற்று அரசியல் சற்றே துளிர்விடும் என்றாலும், அவர்கள் எல்லா ஆயுதங்களுடனும் களத்திற்கு வந்து விடுவார்கள். அப்படியொரு ஆயுதங்களில் ஒன்றுதான் எஜமானர்களின் குரலாக உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள்.
அணைக்காத கரங்கள்
ஒப்புதல் உற்பத்தி(Manufacture of consent ) என்பது பன்னாட்டு மூலதனத்தின், பெரும் தொழிலகங்களின் நலன்களைக் காக்கிற சாகசம். யாரைத் தாக்குகிறார்களோ அவர்களிடமிருந்தே தாக்குவதற்கான இசைவை பெற்றுக் கொள்வதே அதன் லாவகம். பழைய திரைப்படங்களில் மனைவியைக் கணவன் ஓங்கிக் கன்னத்தில் அறைந்தாலும் 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று மனைவியை அடுத்த காட்சியில் பாடவிடுவார்கள். இப்படிப்பட்ட 'ஒப்புதல் உற்பத்தி' தற்போது வலிமையான பிரதமர் வேண்டுமென்ற புதிய பாடலாக ஒலிக்கிறது.
2013டிசம்பரில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் பொருளாதாரப் பாதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கோபம், ஊழலின் மீதான வெறுப்பு ஆகியவையே காரணமென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. காங்கிரசுக்கு மாற்று வேறு எதுவும் கண்களுக்குத் தெரியாவிட்டால் பி.ஜே.பி, வேறு எதுவும் தெரிந்தால் காங்கிரஸ்-பிஜேபி-யைத் தாண்டி ஆம் ஆத்மி என்று தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. ஆகவே மக்கள் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். மாற்று எது என்பதே கேள்வி?
நாமும் வலிமையான பிரதமர் வேண்டுமென்று நினைக்கிறோம்! ஆனால், அது தனிநபர் வலிமையல்ல. கொள்கை வலிமை. மக்களுக்கான அரசியலை அமலாக்குகிற அரசியல் உறுதி. நாலரைக்கோடி சில்லரை வணிகர்களின் வாழ்க்கையைச் சூரையாட வருகிற வால் மார்ட்டைத் தடுக்கிற வலிமை உள்ளவரா! இந்திய மக்களின் சேமிப்புகளை விழுங்க நினைக்கிற பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டுகிற வலிமை உள்ளவரா! கொம்பைச் சிலுப்பி வரும் விலைவாசி உயர்வுக் காளையை அடக்கும் வலிமை உள்ளவரா! கார்ப்பரேட் ஊழல் பேய்களை ஓட்டுகிற வலிமை உள்ளவரா! இதையெல்லாம் பற்றிப் பேசாமல் வலிமை என்றால் எது யாரைப் பாதுகாப்பதற்கு...... யாரைத் தாக்குவதற்கு..... இதுதான் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி...!!
கசப்பான காலங்கள்
கடந்த காலத்தை சற்றுத் திரும்பிப் பாருங்கள்! 2004ல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தோடு 340 பிளஸ் சீட்டுகளைக் கைப்பற்றும் என்று ஊடகங்களின் ஆரவாரத்தோடு தேர்தலைச் சந்தித்த வாஜ்பாய் ஏன் தோற்றுப் போனார்!. 1998டில்லி, இராஜஸ்தானில், பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்தது ஏன்! 1998ல் டில்லி முதல்வராக இருந்த பி.ஜே.பி-யின் சுஸ்மா சுவராஜ் வெளிச்சந்தையில் வெங்காயம் ரூ50 க்கு விற்றபோது அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கிலோ ரூ11 க்கு விற்கிறேன் என்று சில இடங்களில் மட்டும் கடைவிரித்துக் கண் துடைப்பு செய்தும் ஏன் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சுஸ்மா சுவராஜ்-ன் தோல்விச் செய்தி வந்தவுடன் நல்ல பிள்ளையாக வெங்காயம் கிலோ ரூ10க்கு இறங்கி வந்தது தனிக் கதை.  
எனவே, பொருளாதாரப் பாதை மாறாமல் விலைவாசி குறையாது. விலைவாசி குறைந்து விட்டால் பெரிய பெரிய மனிதர்களின் கல்லாப் பெட்டி நிறையாது. வலியவரோ, இளையவரோ... இவர்கள் விலைவாசி குறைப்பதற்கு என்ன மந்திரம் வைத்திருக்கிறார்கள். நமோ...நமோ... என்று முணு முணுப்பதாலோ, தலைமுறை தலைமுறையாய் வறுமையே வெளியேறு! என்று குடும்பப் பாட்டு பாடுவதாலோ விலைவாசி குறையாது. காரணம் பணவீக்கம் என்பது சாதாரண மக்களின் கிழிஞ்சு தொங்கும் பைகளிலுள்ள கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் வசதி படைத்தவர்களின் மூட்டைகளுக்கு மாற்றுகிற ஏற்பாடாகும். மோடியும், மோடியின் மூதாதையர்களும் இதை எப்படிச் செய்தார்கள் என்று பார்ப்போம்.
1998ல் பி.ஜே.பி ஆட்சி இருந்த காலத்தில்தான் உணவுப் பொருட்கள் மீதான மொத்த விலைக் குறியீட்டெண் உச்சபட்சமாக இரண்டு இலக்க சதவிகிதமான 18சதத்தைத் தாண்டியது. காய்கறிகளின் விலைகள் 110சதவீதம், வெங்காய விலை 700 சதவீதம் என ஏறியது. 2000ம் ஆண்டில் அதே வாஜ்பாய் ஆட்சியில்தான் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ146ல் இருந்து ரூ 232க்கு ஏறியது. எரிபொருள், மின்சாரத்தின் விலைகள் 28சதவீதம் உயர்ந்ததென்பது 2001லிருந்து 2010 வரையிலான பத்தாண்டிலுங் கூட நடக்காத விலைவாசி உயர்வு, இதற்கெல்லாம் காரணம் பி.ஜே.பி அரசு  முன்னெடுத்த பொருளாதார முடிவுகள்தான். இன்று காங்கிரஸ் ஆட்சியில் விலை உயர்வுக்கு பிள்ளையார் சுழி (விலைவாசி விநாயகர் என்று சூடம் காண்பித்தாலும் காண்பிப்பார்கள்) போட்டவர்கள் மோடியின் மூதாதையர்கள்தான்.
நடிப்புச் சுதேசிகள்
ஒன்று, தாராளமான இறக்குமதியைக் கட்டவிழ்த்து விட்டது. 1991ல் இந்தியாவின் 3300 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் உண்டு. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சாலைகள் தோறும் சுதேசி சோப் எது? பிளேடு எது? என்று நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் ஏப்ரல்-1 2000ல் 714 பொருட்கள் மீதான இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நீக்கினார்கள். ஏப்ரல்-1, 2001ல் இன்னும் 715 பொருட்கள் மீதான அளவுக் கட்டுப்பாடுகளையும் நீக்கினார்கள். இதற்காக அவர்கள் தெரிவு செய்த தேதி மக்களைக் கேலி செய்வதற்கா என்று தெரியவில்லை. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்
உப்பென்றும், சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி!கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி
இரண்டாவது பெட்ரோலிய பொருட்கள் மீதான மையப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை(Administered Price Mechanism ) நீக்கிய புண்ணியவான்களும் இவர்கள்தான். 1989ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ8 ஆக இருந்தது. இன்று அது ரூ74க்கு உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு கிரின் சிக்னல் போட்டவர்கள் பி.ஜே.பி காரர்கள்தான்.15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச விலைகள் உயர்வைக் கணக்கிற் கொண்டு தானாகவே விலை மாறும் நடைமுறையைக் கொண்டு வந்தவர்கள். திருடிவிட்டு ஓடுபவனே திருடன்... திருடன்.. என்று கத்திக் கொண்டு ஓடுவது போல இன்று பெட்ரோல் விலை உயர்வுக்கு பி.ஜே.பி கண்ணீர் வடிப்பதும் நகைச்சுவைதான்.
மூன்றாவது, இறக்குமதி விலைச் சமன்பாடு (Import Price Parity ) என்ற நூதனமான விலை உயர்வை 2002ல் கண்டு பிடித்தவர்களும் இவர்கள்தான். இறக்குமதி ஆகாமல் உள்நாட்டில் உற்பத்தியாகிற பெட்ரோலுக்கும் இறக்குமதியானால் போடுகிற வரிகள், சரக்குக் கட்டணம், இன்சூரன்ஸ் என ஆகிய செலவுகளைச் சேர்த்து விலை நிர்ணயம் செய்த விபரீதத்தை அரங்கேற்றினார்கள். ஆகாத செலவுக்கு பில் போட்ட ஃப்ராடுத்தனத்தை எதற்காகச் செய்தார்கள் தெரியுமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்றதால் தனியார் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கூட ண்டாமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் தனியார் பங்குகள் எவ்வளவு பாருங்களேன்
இந்தியன் ஆயில் காப்பரேசன்21 சதவீதம்
இந்துஸ்தான்  பெட்ராலியம்-49 சதவீதம்
பாரத் பெட்ரோலியம்-45 சதவீதம்
.என்.ஜி.சி-31 சதவீதம்
கெயில்-43 சதவீதம்
ஆயில் இந்தியா- 22 சதவீதம்
இவர்களின் லாப பங்கிற்காக அரசு காட்டிய கருணை இது. இது தவிர ரிலையன்ஸ் அம்பானி போன்றவர்களின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் லாபம் பெருக வேண்டாமா! ஆகாத செலவுக்கு பில் போட்டார்கள் வாஜ்பாயும், அத்வானியும்.பிள்ளையார் பக்தர்கள் அல்லவா! கடைத் தேங்காயை எடுத்துச் சிதறுகாய் போட்டார்கள்.
இப்படி அம்பானிக்கு கருணை காட்டிய இவர்கள் அப்பாவி விவசாயிகளுக்கு இறக்குமதி விலைச் சமன்பாட்டை கொண்டு வரமுடியுமா! பருத்தி சர்வதேசச் சந்தையில் ரூ 12000 விற்றபோது, இந்தியாவில் விவசாயிகளுக்கு ரூ 3000ம் தான் கிடைத்தது. அம்பானிக்கு வித்தியாசத்தை தந்தவர்கள், விவசாயிகளுக்கு வித்தியாசமாய் எதைத் தந்தார்கள் தெரியுமா! இரண்டு லட்சம் தூக்குக் கயிறுகள். இதில் ராமன், கணேசன், சர்தார், முபாரக், பீட்டர் என்று எந்த வித்தியாசமும் இல்லை.
நான்காவது, அத்தியாவசிய சரக்குகள் சட்டத்தை தளர்த்தி 50,000 டன்கள் வரை பெரும் வியாபாரிகள் பதுக்குவதை சட்டப் பூர்வமாக்கியதுதான். வாஜ்பாயின் வார்த்தைகளில் 'வியாபாரிகள் பதுக்குவது நமது நாட்டின் சட்டத்தின் படி குற்றமல்ல'. உளுந்தம் பருப்பு கிலோ ரூ 30ல் இருந்து ரூ 70க்கும், விளக்கெண்ணெய் ரூ 40ல் இருந்து ரூ80 க்கும், வெங்காயம் ரூ 4ல் இருந்து ரூ 60க்கும் ஏறியது. இந்த முடிவு எடுத்த பிறகுதான். சர்க்கரை போன்ற ரேசன் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டையும் தளர்த்தினார்கள்.
இதே வியாபாரிகளுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி வால்மார்ட்டுக்கு கண்ணசைவு காட்டுகிற அளவுக்கும் பிற்காலத்தில் போனது பி.ஜே.பி-யின் வளர்ச்சி என்பது வேறு கதை. எஜமானனை மாற்றாமல் வாலாட்டுகிற நன்றியுள்ள பிராணிகள் அல்ல முதலாளித்துவக் கட்சிகள். வளர்ச்சிக் கேற்ப வாலைக் குழைத்து ஆட்டப் பழகிக் கொண்டது பி.ஜே.பி.
ஐந்தாவது முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தை அமலாக்கியது பி.ஜே.பி தான். சரக்குகள் கைமாறாமலேயே வணிகம் நடந்தேறுவதும். அதன் மூலம் செயற்கையாய் விலை ஏறுகிற புதிய மோசடி அரங்கேறியதும் இவர்களின் காலத்தில்தான். இந்தியப் பட்ஜெட் தொகையைப் போன்று எட்டு மடங்கு, பத்து மடங்கு வரை முன்பேர வர்த்தகச் சந்தையின் நடவடிக்கை மதிப்புகள் போனதென்பது இச் சூதாட்டம் எவ்வளவு உச்சத்தைத் தொட்டதென்பதற்கு அடையாளம். பாரம்பரிபதுக்கலையும் ஊக்குவித்து நவீன பதுக்கலுக்கும் வழிவகுத்த இவர்களின் அடுத்த அம்பும் சாமானியனின் வயிற்றை மிகச் சரியாகவே குறி வைத்தது.
ஆறாவது , பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக காப்புரிமைச் சட்டத்தை திருத்த முனைந்தது. ஜெர்மனியின் பேயர் நிறுவனம் இந்தியாவில் 2லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த கேன்சர் மருந்துகள் தற்போது ரூ 10,000 க்கும் ரூ20,000 க்கும் உள்நாட்டில் கிடைக்கிறது. பி.ஜே.பி கொண்டு வந்த காப்புரிமைச் சட்டத்திருத்தம் அப்படியே நிறைவேற்றப் பட்டிருந்தால் பரிதாப நோயாளிகள் பல லட்சங்களை இன்னும் செலவழிக்க வேண்டியது இருந்திருக்கும். இடதுசாரிகள் முன்மொழிந்து நிறைவேறிய திருத்தமே சாதாரண மக்களின் உயிர் வாழும் உரிமைகளைத் தக்க வைத்துள்ளது.

ஆள் மாறாட்டமல்ல தீர்வு
பி.ஜே.பி-யின் ஆறுமுகங்கள் மட்டுமே இவை. இன்னும் பல்லாயிரம் முகங்களைக் காட்டக் காத்திருக்கிறது பி.ஜே.பி. வலிமையான பிரதமர் இதையெல்லாம் மாற்றுவாரா! விலைவாசிக்கு கடிவாளம் போடுவாரா! உத்தரகாண்டு வெள்ளத்தில் 30,000 பேரை ஒரே நாளில் காப்பாற்றி அனுமார் போல கரை சேர்த்ததாகக் கதைவிட்டார்களே! கோடானு கோடி மக்களுக்கும் அது போன்ற கதைகளைத் தயார் செய்வார்களா!
பாதை மாறாமல் தீர்வுகள் இல்லை! தேசத்தின் தேவை வேறு பிரதமர்அல்ல. வேறு பாதை !
இரயில் பயணத்தில் என்னுடன் வந்தவர் விவாதம் எங்கெங்கோ திசைமாறி போய்க் கடைசியில் சொன்னார். "ஆமா சார்! உடம்புக்கு ஏதாவது வந்துவிடக்கூடாது என்று பதட்டமாக இருக்கிறது தனியார் மருத்துவமனைக்கு அழுதே வாழ்நாள் சேமிப்பெல்லாம் போய்விடும்" என்று... நானும் சொன்னேன் "தேசத்திற்கும் ஏதும் வரக்கூடாதது வந்து விடக் கூடாதே என்ற பயம் நமக்குத் தேவைப்படுகிறது" என்று....

நன்றி: 'இளைஞர் முழக்கம்'- ஜனவரி 2014

Tuesday, September 3, 2013

தலை குப்புற வீழ்வது ரூபாய் மட்டுமல்ல.. மக்களின் வாழ்க்கையும்தான்

சிதம்பரத்தை ருபாய் தோற்கடித்துவிட்டது என்று ஆகஸ்ட் 29, 2013 அன்று ஒரு செய்தித்தாள் எழுதியது. சிதம்பரம் வருகிற செப்டம்பர் 16, 2013 அன்று 68 வயதைத் தொடுகிறாராம். ஆனால் ருபாய் மதிப்பு வீழ்ந்து வீழ்ந்து ஆகஸ்ட் 28 அன்றே 68.75 ஐத் தொட்டுவிட்டது. இப்படி ருபாய் மதிப்பு வீழ்வது என்றால் என்ன? அதற்கும் சாதாரண விவசாயிகளுக்கும்,தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல! நமது வாழ்க்கை அனுபவமும், வாங்குகிற அடியுமே நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்க வைக்கும்.குப்புற வீழ்வது ரூபாயானாலும் காயம் சாதாரண மக்களுக்குத்தான்.

காயமே சிறந்த ஆசான் 

ஆகஸ்ட் 31 அன்றே பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் 2.99 ஏறிவிட்டது. டீசல் விலை 61 பைசா கூடிவிட்டது. மாதா மாதம் டீசலுக்கு 50 பைசா கூட்டப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் சேர்மன் ஏ.கே.சிங் செப் 2 'இந்து' ஆங்கில நாளிதழில் தந்துள்ள நேர்காணலைப் பாருங்கள்.ருபாய் மதிப்பு 1 ருபாய் மதிப்பு சரிந்தால் டீசல் விலையை லிட்டருக்கு 90 பைசா ஏற்றவேண்டுமாம். என்ன அர்த்தம்? 50 பைசா உயர்வு போதாது என்கிறார். 

உர விலை ஏறியுள்ளது. விவசாயிக்கு ஏற்கனவே கைக்கும் எட்டுவதில்லை வாய்க்கும் எட்டுவதில்லை. நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சரே நவம்பர் 30, 2012 ல் சொன்ன தகவலைப் பாருங்கள். "2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நெல்லின் உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 146 கூடியது. ஆனால் விவசாயிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே அதிகரித்தது. 2011-13 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கோதுமை உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 171 கூடியுள்ளது. ஆனால் விவசாயிக்கான குறித்த பட்ச ஆதரவு விலையோ ரூ 65 தான் கூடியிருக்கிறது." இப்போது உர விலை இன்னும் இன்னும் கூடினால் என்ன ஆவது! கட்டியிருக்கிற கோவணத்திற்கும் ஆபத்து அல்லவா!

இதுதவிர பாமாயில், குளியல் சோப்பு, சலவை சோப்பு, மருந்துகள், இரும்பு என எல்லா விலைகளும் கூடியுள்ளன. ஏதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களின் விலைகள்தான் என்பதல்ல .பெட்ரோல் விலை கூடினால் போக்குவரத்து செலவினம் கூடும். வண்டியில் சவாரி செய்கிற எல்லா சரக்குகளின் விலைகளும் கூடும். 

எனவே ருபாய் மதிப்பு வீழ்கிற பொருளாதாரம் புரிகிறதோ இல்லையோ இவ் வீழ்ச்சி தங்களது வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வீழ்ச்சி எப்படி !

இப்போது ஒரு டாலருக்கு ரூ 68.75 ஆக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரணாப் முகர்ஜி இடம் இருந்து நிதியமைச்சர் பொறுப்பு ஏற்கும் போது ரூ 55 ஆக இருந்தது. 
சில பேர் ருபாய் மதிப்பு கூடுவது போல இருக்கிறதே என்று குழம்புகிறார்கள். ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாலர் பெறுமான உரத்தை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்றால்  55 ருபாய் கொடுத்து வந்தோம். ஆனால் இன்று 1 டாலர் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் ரூ 68.75 தர வேண்டியுள்ளது. வேறு மாதிரி சொல்வதென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் தந்து இறக்குமதி செய்த சரக்குகளை எல்லாம் ஒன்னே கால் ருபாய் கொடுத்து இப்போது வாங்க வேண்டியுள்ளது. காசுக்கு மரியாதை குறைந்துள்ளது இல்லையா! இதைத்தான் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பு வீழ்ச்சி என்கிறோம். 

ஏன் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பை பார்க்க வேண்டியிருக்கிறது என்றால் டாலர்தான் உலகக் கரன்சியாக இன்றைக்கு உள்ளது. உங்கள் ரூபாயைக் கொடுத்து உலகச் சந்தையில் சரக்கு வாங்க முடியாது. இந்தியாவிற்கு தேவையான பெட்ரோல்,டீசலில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.
தங்கம் போன்ற ஆடம்பர பொருட்களும் நிறைய இறக்குமதி ஆகின்றன. இதற்கெல்லாம் டாலர் தேவைப்படுகிறது. ஒரு பொருளுக்கு கிராக்கி கூடும்போது அதன் விலை கூடும் அல்லவா.
அதனால் டாலர் விலை கூடுகிறது. ருபாய் விலை வீழ்கிறது. நாணயப் பரிவர்த்தனைகளும் சரக்குகள் ஆகிவிட்டன. 

தனிக்காட்டு ராஜா 

இப்படி அமெரிக்காவின் டாலர் தனிக்காட்டு ராஜா மாதிரி இருப்பதற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒரு டாலருக்கு 68 ரூபாய்க்கு பதிலாக, ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்று இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! சுகமான கற்பனை மட்டுமல்ல் இது. 1947 க்கு முன்பு ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்ற நிலைமை இருந்திருக்கிறது. ஏன் 1910 ல் ஒரு டாலருக்கு 10 பைசா என்று கூட இருந்திருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரத்தில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவிற்கு கிடைத்த செல்வாக்கு, சோஷலிச முகாமிற்கு 80 களின் இறுதியில் ஏற்பட்ட பின்னடைவு, மாற்று நாணயமாக வளர்ந்த யுரோ சந்தித்துள்ள பின்னடைவு. டாலரின் மேலாதிக்கத்திற்கு சவால் விட்ட சதாம் உசைன் போன்றவர்களை ராணுவ ரீதியாக ஒடுக்கியது.. இப்படி நிறைய விசயங்களைப் பேசினால்தான் டாலரின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும். லத்தின் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றுப் பாதை நோக்கி இந்திய போன்ற நாடுகள் சிந்திக்க மறுப்பதும் டாலரின் பலமாகும். பெட்ரோலுக்கு ஒரே தடவையில் மூன்று ரூபாய் அதிகமாக அழுவதற்கும், உலக அரசியலுக்கும் இருக்கிற தொடர்பை 
விளக்குவதற்கு பக்கங்கள் போதாது.

சரி! எங்கேயோ போய் விட்டோம்! இப்போது அண்மைக் காலமாக டாலர் ஏறுமுகமாக இருப்பதற்கு என்ன காரணம்? அமெரிக்க பொருளாதாரம் சிறிது மீட்சி அடைந்திருப்பதால் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் பங்குச் சந்தையை விட்டு டாலர் வெளியேறி அமெரிக்காவிற்கு திரும்புகிறது; அமெரிக்காவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வட்டி விகிதங்களை அதிகரிக்கின்றது ஆகியன உடனடிக் காரணங்கள் என்பது உண்மையே. ஆனால் இப்படிப்பட்ட சர்வதேசக் காரணிகள் இவ்வளவு நம்மை பாதிப்பது ஏன்? இதற்கான உள்நாட்டுக் காரணங்களை உள்ளே போய் ஆய்வு செய்து உண்மையை பேச மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தயாராக இல்லை. 
  
இறக்குமதியை திறந்துவிட்டது யார்!

நடப்புக் கணக்கு பற்றாக்குறை பற்றி கண்ணீர் வடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, அதைக் குறைக்கவேண்டும் என்கிறார்கள். தங்கம் வாங்குவதைக் குறையுங்கள் என்று சிதம்பரம் வேண்டுகோள் கொடுக்கிறார். 

ஆனால் இப்படி இறக்குமதி பெருகியதற்கு யார் காரணம்! 1991 ல் 3330 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் (Quantitative Restrictions) இருந்தன. அவை படிப்படியாக கைவிடப்பட்டு 3300 பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. கவர்ச்சி கரமான ஆடம்பரப் பொருட்கள் வருவதை வளர்ச்சி என்றும் பறை சாற்றினார்கள்.

இன்று இந்தியா முழுவதும் உள்ள அரைக் கோடிக்கும் அதிகமான கைநெசவாளர்கள் வாடுவது ஏன்! ஏன் அவர்கள் தொழிலை விட்டு ஓடுகிறார்கள்? ஆயத்த ஆடைகளுக்கு ஜீரோ இறக்குமதி வரிகள் என்று அறிவித்தது யார்! 

உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்கிற அளவுக்குகூட இறக்குமதி வரிச் சுவர்களை எழுப்பாமல் பல பொருட்களை உள்ளே அனுமதித்தது யார்! ரூ 58000 கோடிகள் வரை தங்க இறக்குமதிக்கு மட்டும் வரிச் சலுகைகளை கடந்த ஆண்டு வரை தந்து ஊக்குவித்தது யார்!

இப்படி இறக்குமதிகளை மானாவாரியாகத் திறந்துவிட்டு இப்போது டாலர் தேவை... டாலர் தேவை.. என்று அலைந்தால் என்ன செய்வது! 

கேன்சருக்கு அனால்ஜினா 

கேன்சர் நோயாளிகளுக்கு பக்க விளைவாக காய்ச்சல் வரலாம். ஆகையால் அனால்ஜின் குணப்படுத்திவிடுமா! ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏற்றுவது, இறக்குவது எல்லாம் இப்படி காய்ச்சல் மாத்திரை கொடுப்பது மாதிரிதான்.தங்க இறக்குமதி வரியை சிதம்பரம் கூட்டினாலும் இறக்குமதி குறையவில்லையே ஏன்! மக்கள் பேங்குகளில் போடுகிற பணத்திற்கு பணவீக்கத்தால் மரியாதை போவதால் பயந்து போய் தங்க முதலீடுகளுக்கு ஓடுகிறார்கள். 

ருபாய் மதிப்பு குறைந்தால் இந்திய ஏற்றுமதியாளருக்கு லாபம் வரவேண்டும. அதாவது வருகிறதா! காரணம், உலகச் சந்தையில் கிராக்கி குறைந்திருப்பதால் விற்க முடியவில்லை. வளர்ந்த நாடுகள் பேரம் பேசி விலையைக் குறைத்து விடுகின்றன. ஏற்றுமதியாளர்கள் முன்பேர வர்த்தகத்தில் பதிந்ததால் இப்போதைய விலை கிடைப்பதில்லை. முன்னால் போனாலும் உதை, பின்னால் போனாலும் உதை என்பது மாதிரி இறக்குமதி விலை கூடுகிறது. ஏற்றுமதிக்கோ விலை கிடைப்பதில்லை. 
  
உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றை அதிகரிக்காமல் என்ன ததிங்கனத்தோம் போட்டாலும் தீர்வு கிடைக்காது. உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விலை போகாது என்பது பழமொழி. உலகமயத்திற்கும் அது பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தாமல் வெளிநாட்டுச் சந்தையின் பயன்களை அனுபவிக்க முடியாது. இது உலகமயம் தந்துள்ள அனுபவம்.

'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்பதை சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியொரு வளம் இங்கே இல்லையென்றால், தொழில்நுட்பம் இல்லையென்றால் வெளிநாட்டில் பெறலாம். ஆனால் இருக்கிற வளத்தை காவுகொடுத்துவிட்டு கையேந்தினால் நாம் பெற விரும்புகிற தொழில் நுட்பமும் கௌரவமான பரிமாற்றமாக இருக்காது. 

மன்மோகனும், சிதம்பரமும் இதை சிந்திப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் மேலும் அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்திலும், நிதித் துறையிலும் திறந்து விடுவதே தீர்வு என்று கூறுகிறார்கள். கண்ணை விற்றுவிட்டு சித்திரம் வாங்கிய பிறகும் கற்பனயில் ரசிப்பதே அழகு என்கிறார்கள்.  

க.சுவாமிநாதன்