Sunday, January 1, 2012

மான்டெக் சிங் அலுவாலியா ! கஞ்சி குடிக்க வழி என்னய்யா !இந்தியத் திட்டக் கமிசன் சாதாரண மக்கள் பலரின்
திட்டுக்களை வாங்கிய கமிசனாக மாறிப்போயிருக்கிறது.
அவனவன் கைக்கும் வாய்க்கும் எட்டாமல் தவித்துக்
கொண்டிருக்கும் போது தினம்  32 ருபாய் கையில் இருந்தால்
நகர மக்கள் வாழ்க்கையை நடத்திவிடலாம் என்று
சொன்னால் கோபம் வராதா?

இந்தத் திட்டக் கமிசன் புத்திசாலிகள் எங்கே போய்
யாரைச் சந்தித்து கணக்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
உச்ச நீதி மன்றத்தில் திட்டக் கமிசன் இப்படி ஒரு அபிடவிட் 
தாக்கல் செய்த மறுநாளே "ஹிந்து பிசினஸ் லைன் " ரூ 32 ஐ
வைத்துக் கொண்டு ஒரு நாளை எப்படித் தள்ள முடியும் என்று
பேட்டி எடுத்தது. 
டெல்லி திட்டக் கமிசனின் வாசலில் வேர்க்கடலை
விற்கிற ஒருவரிடம் போய்க் கேட்டபோது, "நான் போக்குவரத்துக்கு
மட்டுமே ஒரு நாளைக்கு ரூ 30 செலவழிக்கிறேன்.மதியச் சாப்பாட்டில்
காய்கறிகளே சேர்ப்பதில்லை" என்றார். அடப் பாவிகளே இவர்களின்
மூக்குக்கு கீழே நிக்கிற வேர்க்கடலைக்காரரிடம் கூட கேட்கவில்லையா!
சென்னை தி.நகரில் செவாலியே சிவாஜி கணேசன் தெருவில் தள்ளு
வண்டியில் மதிய சாப்பாடு ரூ 30 ஆகும். இப்படி இருக்கும் போது
நகரத்திற்கு ரூ 32 , கிராமத்திற்கு ரூ 26 என்று உச்ச நீதி மன்றத்தில் போய்ச்
சொல்லியிருகிறார்கள்.

சில பேர் திட்டக் கமிசனுக்கு மூளை கெட்டுப் போய்விட்டதா என்று
கேட்கிறார்கள். அது உலகமய மூளை. திட்டக் கமிசனின் இந்த மதிப்பீட்டிற்கு
என்ன நோக்கம்? வளர்ச்சி குன்றிய நாடுகளை விட ( LEAST DEVELOPED
COUNTRIES ) இந்தியாவில் உணவு நுகர்வு குறைவாக உள்ளதே, அதை
எப்படி அதிகரிப்பது என்றல்லவா யோசித்திருக்க வேண்டும். அதுதானே
வறுமை மதிப்பீட்டின் இலக்காக இருக்கவேண்டும். ஆனால் இந்த
புண்ணியவான்களின் நோக்கமே வேறு! எப்படி உணவு மானியத்தைக்
குறைப்பது என்பதே இந்தச் சீத்தலைச் சாத்தனார்களின் மண்டைக்குள்ளே
குடைகிற விஷயம். ஆகவேதான் ரூ 32 போதும் எனத் தடாலடியாய்ச்
சொல்லியிருகிறார்கள். ( உத்சா பட்நாயக்கின் நல்ல கட்டுரை ஒன்று
MACROSCAN இணைய தளத்தில் உள்ளது. படியுங்கள்)

திட்டக் கமிசனின் இம்மதிப்பீடை ஆதரிப்பவர்களும் உண்டு. SWAMINOMICS
என்கிற இணைய தளத்திற்குள் போய்ப் பாருங்கள். சுவாமிநாதன் எஸ்.
அங்கலேச்வர ஐயர்  என்கிற பொருளாதார நிபுணரின் தளம் அது. அவர்
கேட்கிறார். ஏற்கனவே ரூ 24 தானே அளவுகோலாக உள்ளது. இப்போது
ரூ 32 என்றவுடன் எல்லோரும் ஏன் குதிக்கிறார்கள் என்று கேட்டு ஒரு நாளைக்கு
ஒருவர்க்கு ரூ 32 என்றால் 6 பேர் கொண்ட குடும்பத்திற்கு எவ்வளவு, அதை
மாதக் கணக்காகப் போட்டால் எவ்வளவு என்றெல்லாம் கணக்குப் போட்டு
இப்படிச் சொன்னால் மககள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று கணக்கு
வாத்தியார் போல வகுப்பு எடுத்திருக்கிறார்.

அங்கலேஸ்வரருக்கு ஒன்றைச் சொல்லவேண்டும். ரூ 24 என்ற அளவுகோலையே
தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் எதிர்த்தார்கள். விமர்சித்தார்கள். எனவே ரூ 32
என்றவுடன் திடீர் எனக் குதிக்கவில்லை. இரண்டாவது ஏன் இப்போது இது
இவ்வளவு விவாதிக்கப்படுகிறது என்பதை அவரைப் போன்றவர்கள் உப்பரிகையில்
இருந்து வீதிகளுக்கு வந்து பார்க்கவேண்டும். இன்றைக்கு இருக்கிற மன்மோகன் சிங்
அரசாங்கம் மக்களிடம் அம்பலமாகி நிற்கிறது. ஊழல்களின் பிரமாண்டம்
தங்களின் வரிப்பணம் அநியாயமாய்ச் சூறையாடப்படுகிற உணர்வை மக்களிடம்
ஏற்படுத்தியுள்ளது.எனவே ரூ 24 க்கு வராத கோபம் ரூ 32 மீது வந்துள்ளது. இதைப்
புரிந்து கொள்ளாமல் ரூ 32 க்கு ஏதோ தினமும் சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும்
சாப்பிட்டு பீடாவும் போட்டுக் கொள்ளலாம் என்பது போலப் பேசுகிறார் அங்கலேஸ்வரர்.

இன்னொன்று, 32 ஆண்டுகளாக இம்மதிப்பீடுகள் அடிப்படையாய் எவ்வளவு கலோரி
உணவு மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது, அதை வாங்குவதற்கு விலைவாசி உயர்வையும்
கணக்கிற் கொண்டு எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற அறிவியல் பூர்வமான
அணுகுமுறை இல்லை. நகர மக்களுக்கு 2100 கலோரி, கிராம மக்களுக்கு 2400 கலோரி
(பின்னர் இது 2200 கலோரி எனக் குறைக்கப்பட்டது) என நிர்ணயிக்கப்பட்டது. 1979 ல்
இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை விட 2011 ல் 17 மடங்கு அதிகமாகியுள்ளது.
இப்போது கொடுக்கிற ரூ 32 ஐ வைத்து 1500 கலோரி நுகர்வைக் கூட உறுதி செய்ய முடியாது
என உத்சா பட்நாயக்கின் கணக்கு சொல்கிறது. இது விவாதிக்கப்பட வேண்டாமா?

அங்கலேஸ்வரர் நடுத்தர வர்க்கத்தின் மீது பாய்ந்து உள்ளார். என்ன சாதாரணமான மககள்
மீது திடீர் கரிசனம்? நீங்கள் உங்கள் வீட்டிற்கு வருகிற வேலைக்காரர்களுக்கு எவ்வளவு
தருகிறீர்கள் என்று கேட்கிறார். அய்யா! ஒரு சமுகத்தில் தொழிலாளியின் கௌரவம்
எப்படி அங்கிகரிக்கப்படுகிறதோ அதன் வெளிப்பாடுகள் கீழ் மட்டம் வரை இருக்கும்.
தனிமனிதர்கள் விதிவிலக்காக இருக்கலாம். இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது
தவறுமில்லை. ஆனால் திருத்தப்பட வேண்டிய இடத்தைவிட்டு 'செல்லிடத்து மட்டும்
சினம் காட்டுவது ஏன் ?" என்பதே கேள்வி.

இந்தச் சமுக அமைப்பில் அதைத் தீர்மானிப்பது யார்? அரசாங்கத்தை "மாதிரி முதலாளி"
என்று அழைத்த காலம் உண்டு. உலகமயம் அதை மறக்கடித்து விட்டது. காரணம்
அரசாங்கம் மாதிரியாக இருந்தால் பன்னாட்டு கம்பெனிகளும், பெரும் தொழிலகங்களும்
பின்பற்ற வேண்டுமே! அதனால் அரசாங்கத்தையே 'ஒருமாதிரி முதலாளியாக' மாற்றிவிடு
என ஆணையிட்டது. தொழிற்சங்கமற்ற உலகம், சங்கம் அமைக்க கூடாது, கூட்டு பேர
உரிமை பற்றி மூச்சு விடக் கூடாது என்பதே இன்றைக்கு நிறுவன உலகின் போக்கு.
அய்யா அங்கலேஸ்வரரே! இதை மாற்றாமல் பாவம் நடுத்தர வர்க்கத்தை மட்டும் கம்பைத்
தூக்கி விரட்டுகிறீர்களே! அந்த கம்பு யாருடைய கம்பு என்பதே எங்கள் கேள்வி!

ரூ 32 என்றவுடன் அல்லது ரூ 26 என்றவுடன் நாம் எல்லோருமே சாப்பாடு பற்றியே
சிந்திக்கிறோம். படிக்கவேண்டாமா? சளி, காய்ச்சல் என்றால் ஊசி போடவேண்டாமா?
மருந்து சாப்பிட வேண்டாமா? சினிமா பார்க்கா வேண்டாமா? திட்டக் கமிசன் கணக்குப்படியே
உணவுக்கு ரூ 18 ( நகரம்) ரூ 14 ( கிராமம்) தான். என்ன கொடுமை. ஒவ்வோர் ஆண்டும்
லட்சக் கணக்கான கோடிகள் பெரும் தொழிலகங்களுக்கு வரிச் சலுகைகளாக
தரப்படுகிறதே! அந்தக் கணக்கை அலுவாலியாக்கள் போட்டுச் சொல்வார்களா! குனிந்து
குனிந்து குடிசைக்குள் நுழையும் எதிர்கால இளவரசர் ராகுல் காந்தியாவது எப்படி
நீங்கள் வயிற்றை நிரப்புகிறீர்கள் என்று அம்மக்களிடம் கேட்டுச் சொல்லாம். எதுவுமே
தெரியாது என்று சொல்கிற "நேர்மையான'' பிரதமரிடம் கேட்பதற்கு நம்மிடம் என்ன
இருக்க முடியும்? 

அய்யாக்கள் எல்லோரிடம் நம்முடைய ஒரே கேள்வி!
ரூ 32 லிலும், ரூ 24 லிலும் வாழ்வது எப்படியய்யா!