Friday, April 13, 2012

வின்..வின் ...

வின்..வின் ...

உலகமயத்தில் பன்னாட்டு மூலதனத்திற்கும், இந்தியப் பெரும் தொழிலகங்களுக்கும் 
வெற்றி...வெற்றி.. என்ற (WIN ...WIN ...) நிலைமைதான். மேக்ஸ் நியூயார்க் லைப் நிறுவனத்தின் 26 
சதவீதப் பங்குகளை ஜப்பானின் மிட்சுய் நிறுவனம் ரூ 2731 கோடிகளுக்கு வாங்கப்போகிற 
"டீல்" இதற்கு இன்னொரு உதாரணம்.

இந்தியப் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான அனல்ஜித் சிங்கின் மேக்ஸ் நிறுவனம் இந்த 
இணைவினையில் 70 சதவீதத்தை வைத்துள்ளது. 11 ஆண்டுகளாக கூட்டாளியாக உள்ள நியூயார்க்
லைப் ஆசியச் சந்தையில் இருந்து வெளியேறி வருகிறது. சீனா, கொரியா, தாய்லாந்து, வியட்நாம்
என்கிற வரிசையில் தற்போது இந்தியாவின் "டர்ன்" ஆகும். 

நியூயார்க் லைப் 16 .6 சதவீதப் பங்குகளை நேரடியாகவும் , 9 .37 சதவீதப் பங்குகளை மேக்ஸ் நிறுவனம்
மூலமாகவும்  மிட்சுய் நிறுவனத்திற்கு விர்கப்போகிறது. மூன்று மடங்கு விலையாம். அண்மையில்
ரிலையன்ஸ் நிறுவனம் ஜப்பானின் நிப்பான் கம்பெனிக்கு மூன்றரை மடங்கு விலைக்கு விற்றது.
ஒப்பிட்டால் கொஞ்சம் மார்ஜின் கம்மிதான் என்றாலும் லாபம் கொஞ்சநஞ்சமல்ல.

இதில் மேக்ஸ் வாயிலாக விற்கப்படுவதில் மேக்ஸ்சுக்கும் லாபம் கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொட்டியிருக்கிறது. ரூ 182 கோடி மதிப்புள்ள பங்குகள் ரூ 984 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது.
ரூ 802 கோடி லாபம். கடந்த ஆண்டு இந்த இணைவினையில் ஏற்பட்ட மொத்த நட்டமான ரூ 281 
கோடிகளும் இந்த ஒரே டீல் மூலம் சரிக்கட்டப்படுகிறது.

உலகமயப்பேரங்களில் இந்தியத் தொழிலதிபர்களும் பயனடைகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

டேட்டா.. உல்டா..   

இந்திய அரசின் புள்ளிவிவரக் குறியீடுகள் நம்பகத்தன்மையை இழந்து கொண்டிருக்கின்றன என்பது 
அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஜனவரி 2012 ல் தொழிற்சாலயில் இருந்து வெளிவருகிற சரக்கு 6 .8 சதவீத வளர்ச்சியை எட்டியதாக 
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 1 .1 சதவீதம்தான் வளர்ச்சி என 
தற்போது தெரிவிக்கின்றன. எவ்வளவு பெரிய இடைவெளி? 6 .8 சதவீதம் எங்கே! 1 .1 சதவீதம் எங்கே!
தவறுக்கு காரணமாக சொல்லப்படுவது இன்னும் கேலிக்கூத்தானது. சர்க்கரை உற்பத்தி 58 லட்சம் டன் 
என்பதை சர்க்கரை இயக்குனரகம் தவறுதலாக 1 கோடியே 30 லட்சம் டன் என தகவல் தந்துவிட்டதாம்.
இவ்வளவு வித்தியாசம் வருகிறதே என நிபுணர்கள் யாரும் பார்த்தவுடனே மூளையைக் கசக்க 
மாட்டார்களா! இந்த விவரங்களையெல்லாம் வைத்துதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த 
மதிப்பீடுகள் எல்லாம் செய்யப்படுகின்றன.

ஏற்கனவே டிசம்பர் மாதத்தின் ஏற்றுமதித் தொகை அதிகமாக காண்பிக்கப்பட்டது. எவ்வளவு தெரியுமா?
ரூ 47000 கோடிகள். 

பாட்டி கதை ஒன்று உண்டு. ராஜா ஒருத்தன் நாட்டில் எத்தனை காக்கா உள்ளன என்று எண்ணச் சொன்னான்.
தெரியாமல் முழித்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது.ஒரு புத்திசாலி மட்டும் பத்தாயிரத்து முப்பத்து 
மூன்று என்று ஓங்கி அடித்தானாம். ஒன்னு கூடினால் ? என்று ராஜா கேட்க விருந்துக்கு வந்திருக்கும் 
என்றானாம். ஒன்று குறைந்தால் என்று கேட்டவுடன், வெளிநாட்டிற்கு விருந்துக்கு போயிருக்கும் என்றானாம்.
பாட்டி கதையில் இருக்கிற லாஜிக் கூட நம்ப நிபுணர்கள் கணக்கில் இல்லையே.

* கண்ணாடி இங்கே? பூதம் எங்கே?

சோயா பீன்ஸ், கொத்தவரங்காய் விதைகள் விலைகள் எல்லாம் எக்குத்தப்பாய் குதித்ததால் அவை இரண்டும் 
முன்பேர வர்த்தகச் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

அடுத்து கடுகு, பச்சைக் கற்பூரம் எண்ணெய், ஏலக்காய், கொண்டைக்கடலை, மஞ்சள் ஆகியவற்றின் விலைகளின் 
தாண்டவும் இப்போது பூதக் கண்ணாடியின் வரம்புக்குள் வந்துள்ளதாம்.

கற்பூர எண்ணெய் ( MENTHA OIL ) டிசம்பர் 30 ல் கிலோ ரூ 1319 ஆக இருந்தது.ஏப்ரல் 12 , 2012 ல் ரூ 2426 க்கு எகிறிவிட்டது.மூன்றரை மாதத்தில் 82 சதவீத உயர்வு. ஏலக்காய் விலையும் கிலோவுக்கு ரூ 600 லிருந்து ரூ 955 க்கு இதே காலத்தில் தாவியிருக்கிறது. அதே மூன்றரை மாதத்தில் 59 சதவீத உயர்வு.

இந்தச் சதவீதங்கள் எல்லாம் மிகக் குறைவாம். கொத்தவரங்காய் விதைகள் 500 சதவீதம், 1000 சதவீதம் வரை 
உச்சாணிக் கோப்பிற்கு போனதாம்.

முன்பேர வர்த்தகச் சூதாட்டத்திற்கு ஆதரவாகவே அரசு விலைக் கட்டுப்பாட்டை அரசு கைகழுவியது. பூதக் 
கண்ணாடியின் வரம்புக்குள் அரசின் கொள்கைகள் வராவிட்டால் என்ன தேடினாலும் கிடைக்காது. தெரியாது.