Tuesday, September 3, 2013

தலை குப்புற வீழ்வது ரூபாய் மட்டுமல்ல.. மக்களின் வாழ்க்கையும்தான்

சிதம்பரத்தை ருபாய் தோற்கடித்துவிட்டது என்று ஆகஸ்ட் 29, 2013 அன்று ஒரு செய்தித்தாள் எழுதியது. சிதம்பரம் வருகிற செப்டம்பர் 16, 2013 அன்று 68 வயதைத் தொடுகிறாராம். ஆனால் ருபாய் மதிப்பு வீழ்ந்து வீழ்ந்து ஆகஸ்ட் 28 அன்றே 68.75 ஐத் தொட்டுவிட்டது. இப்படி ருபாய் மதிப்பு வீழ்வது என்றால் என்ன? அதற்கும் சாதாரண விவசாயிகளுக்கும்,தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல! நமது வாழ்க்கை அனுபவமும், வாங்குகிற அடியுமே நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்க வைக்கும்.குப்புற வீழ்வது ரூபாயானாலும் காயம் சாதாரண மக்களுக்குத்தான்.

காயமே சிறந்த ஆசான் 

ஆகஸ்ட் 31 அன்றே பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் 2.99 ஏறிவிட்டது. டீசல் விலை 61 பைசா கூடிவிட்டது. மாதா மாதம் டீசலுக்கு 50 பைசா கூட்டப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் சேர்மன் ஏ.கே.சிங் செப் 2 'இந்து' ஆங்கில நாளிதழில் தந்துள்ள நேர்காணலைப் பாருங்கள்.ருபாய் மதிப்பு 1 ருபாய் மதிப்பு சரிந்தால் டீசல் விலையை லிட்டருக்கு 90 பைசா ஏற்றவேண்டுமாம். என்ன அர்த்தம்? 50 பைசா உயர்வு போதாது என்கிறார். 

உர விலை ஏறியுள்ளது. விவசாயிக்கு ஏற்கனவே கைக்கும் எட்டுவதில்லை வாய்க்கும் எட்டுவதில்லை. நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சரே நவம்பர் 30, 2012 ல் சொன்ன தகவலைப் பாருங்கள். "2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நெல்லின் உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 146 கூடியது. ஆனால் விவசாயிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே அதிகரித்தது. 2011-13 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கோதுமை உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 171 கூடியுள்ளது. ஆனால் விவசாயிக்கான குறித்த பட்ச ஆதரவு விலையோ ரூ 65 தான் கூடியிருக்கிறது." இப்போது உர விலை இன்னும் இன்னும் கூடினால் என்ன ஆவது! கட்டியிருக்கிற கோவணத்திற்கும் ஆபத்து அல்லவா!

இதுதவிர பாமாயில், குளியல் சோப்பு, சலவை சோப்பு, மருந்துகள், இரும்பு என எல்லா விலைகளும் கூடியுள்ளன. ஏதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களின் விலைகள்தான் என்பதல்ல .பெட்ரோல் விலை கூடினால் போக்குவரத்து செலவினம் கூடும். வண்டியில் சவாரி செய்கிற எல்லா சரக்குகளின் விலைகளும் கூடும். 

எனவே ருபாய் மதிப்பு வீழ்கிற பொருளாதாரம் புரிகிறதோ இல்லையோ இவ் வீழ்ச்சி தங்களது வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வீழ்ச்சி எப்படி !

இப்போது ஒரு டாலருக்கு ரூ 68.75 ஆக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரணாப் முகர்ஜி இடம் இருந்து நிதியமைச்சர் பொறுப்பு ஏற்கும் போது ரூ 55 ஆக இருந்தது. 
சில பேர் ருபாய் மதிப்பு கூடுவது போல இருக்கிறதே என்று குழம்புகிறார்கள். ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாலர் பெறுமான உரத்தை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்றால்  55 ருபாய் கொடுத்து வந்தோம். ஆனால் இன்று 1 டாலர் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் ரூ 68.75 தர வேண்டியுள்ளது. வேறு மாதிரி சொல்வதென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் தந்து இறக்குமதி செய்த சரக்குகளை எல்லாம் ஒன்னே கால் ருபாய் கொடுத்து இப்போது வாங்க வேண்டியுள்ளது. காசுக்கு மரியாதை குறைந்துள்ளது இல்லையா! இதைத்தான் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பு வீழ்ச்சி என்கிறோம். 

ஏன் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பை பார்க்க வேண்டியிருக்கிறது என்றால் டாலர்தான் உலகக் கரன்சியாக இன்றைக்கு உள்ளது. உங்கள் ரூபாயைக் கொடுத்து உலகச் சந்தையில் சரக்கு வாங்க முடியாது. இந்தியாவிற்கு தேவையான பெட்ரோல்,டீசலில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.
தங்கம் போன்ற ஆடம்பர பொருட்களும் நிறைய இறக்குமதி ஆகின்றன. இதற்கெல்லாம் டாலர் தேவைப்படுகிறது. ஒரு பொருளுக்கு கிராக்கி கூடும்போது அதன் விலை கூடும் அல்லவா.
அதனால் டாலர் விலை கூடுகிறது. ருபாய் விலை வீழ்கிறது. நாணயப் பரிவர்த்தனைகளும் சரக்குகள் ஆகிவிட்டன. 

தனிக்காட்டு ராஜா 

இப்படி அமெரிக்காவின் டாலர் தனிக்காட்டு ராஜா மாதிரி இருப்பதற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒரு டாலருக்கு 68 ரூபாய்க்கு பதிலாக, ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்று இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! சுகமான கற்பனை மட்டுமல்ல் இது. 1947 க்கு முன்பு ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்ற நிலைமை இருந்திருக்கிறது. ஏன் 1910 ல் ஒரு டாலருக்கு 10 பைசா என்று கூட இருந்திருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரத்தில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவிற்கு கிடைத்த செல்வாக்கு, சோஷலிச முகாமிற்கு 80 களின் இறுதியில் ஏற்பட்ட பின்னடைவு, மாற்று நாணயமாக வளர்ந்த யுரோ சந்தித்துள்ள பின்னடைவு. டாலரின் மேலாதிக்கத்திற்கு சவால் விட்ட சதாம் உசைன் போன்றவர்களை ராணுவ ரீதியாக ஒடுக்கியது.. இப்படி நிறைய விசயங்களைப் பேசினால்தான் டாலரின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும். லத்தின் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றுப் பாதை நோக்கி இந்திய போன்ற நாடுகள் சிந்திக்க மறுப்பதும் டாலரின் பலமாகும். பெட்ரோலுக்கு ஒரே தடவையில் மூன்று ரூபாய் அதிகமாக அழுவதற்கும், உலக அரசியலுக்கும் இருக்கிற தொடர்பை 
விளக்குவதற்கு பக்கங்கள் போதாது.

சரி! எங்கேயோ போய் விட்டோம்! இப்போது அண்மைக் காலமாக டாலர் ஏறுமுகமாக இருப்பதற்கு என்ன காரணம்? அமெரிக்க பொருளாதாரம் சிறிது மீட்சி அடைந்திருப்பதால் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் பங்குச் சந்தையை விட்டு டாலர் வெளியேறி அமெரிக்காவிற்கு திரும்புகிறது; அமெரிக்காவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வட்டி விகிதங்களை அதிகரிக்கின்றது ஆகியன உடனடிக் காரணங்கள் என்பது உண்மையே. ஆனால் இப்படிப்பட்ட சர்வதேசக் காரணிகள் இவ்வளவு நம்மை பாதிப்பது ஏன்? இதற்கான உள்நாட்டுக் காரணங்களை உள்ளே போய் ஆய்வு செய்து உண்மையை பேச மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தயாராக இல்லை. 
  
இறக்குமதியை திறந்துவிட்டது யார்!

நடப்புக் கணக்கு பற்றாக்குறை பற்றி கண்ணீர் வடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, அதைக் குறைக்கவேண்டும் என்கிறார்கள். தங்கம் வாங்குவதைக் குறையுங்கள் என்று சிதம்பரம் வேண்டுகோள் கொடுக்கிறார். 

ஆனால் இப்படி இறக்குமதி பெருகியதற்கு யார் காரணம்! 1991 ல் 3330 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் (Quantitative Restrictions) இருந்தன. அவை படிப்படியாக கைவிடப்பட்டு 3300 பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. கவர்ச்சி கரமான ஆடம்பரப் பொருட்கள் வருவதை வளர்ச்சி என்றும் பறை சாற்றினார்கள்.

இன்று இந்தியா முழுவதும் உள்ள அரைக் கோடிக்கும் அதிகமான கைநெசவாளர்கள் வாடுவது ஏன்! ஏன் அவர்கள் தொழிலை விட்டு ஓடுகிறார்கள்? ஆயத்த ஆடைகளுக்கு ஜீரோ இறக்குமதி வரிகள் என்று அறிவித்தது யார்! 

உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்கிற அளவுக்குகூட இறக்குமதி வரிச் சுவர்களை எழுப்பாமல் பல பொருட்களை உள்ளே அனுமதித்தது யார்! ரூ 58000 கோடிகள் வரை தங்க இறக்குமதிக்கு மட்டும் வரிச் சலுகைகளை கடந்த ஆண்டு வரை தந்து ஊக்குவித்தது யார்!

இப்படி இறக்குமதிகளை மானாவாரியாகத் திறந்துவிட்டு இப்போது டாலர் தேவை... டாலர் தேவை.. என்று அலைந்தால் என்ன செய்வது! 

கேன்சருக்கு அனால்ஜினா 

கேன்சர் நோயாளிகளுக்கு பக்க விளைவாக காய்ச்சல் வரலாம். ஆகையால் அனால்ஜின் குணப்படுத்திவிடுமா! ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏற்றுவது, இறக்குவது எல்லாம் இப்படி காய்ச்சல் மாத்திரை கொடுப்பது மாதிரிதான்.தங்க இறக்குமதி வரியை சிதம்பரம் கூட்டினாலும் இறக்குமதி குறையவில்லையே ஏன்! மக்கள் பேங்குகளில் போடுகிற பணத்திற்கு பணவீக்கத்தால் மரியாதை போவதால் பயந்து போய் தங்க முதலீடுகளுக்கு ஓடுகிறார்கள். 

ருபாய் மதிப்பு குறைந்தால் இந்திய ஏற்றுமதியாளருக்கு லாபம் வரவேண்டும. அதாவது வருகிறதா! காரணம், உலகச் சந்தையில் கிராக்கி குறைந்திருப்பதால் விற்க முடியவில்லை. வளர்ந்த நாடுகள் பேரம் பேசி விலையைக் குறைத்து விடுகின்றன. ஏற்றுமதியாளர்கள் முன்பேர வர்த்தகத்தில் பதிந்ததால் இப்போதைய விலை கிடைப்பதில்லை. முன்னால் போனாலும் உதை, பின்னால் போனாலும் உதை என்பது மாதிரி இறக்குமதி விலை கூடுகிறது. ஏற்றுமதிக்கோ விலை கிடைப்பதில்லை. 
  
உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றை அதிகரிக்காமல் என்ன ததிங்கனத்தோம் போட்டாலும் தீர்வு கிடைக்காது. உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விலை போகாது என்பது பழமொழி. உலகமயத்திற்கும் அது பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தாமல் வெளிநாட்டுச் சந்தையின் பயன்களை அனுபவிக்க முடியாது. இது உலகமயம் தந்துள்ள அனுபவம்.

'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்பதை சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியொரு வளம் இங்கே இல்லையென்றால், தொழில்நுட்பம் இல்லையென்றால் வெளிநாட்டில் பெறலாம். ஆனால் இருக்கிற வளத்தை காவுகொடுத்துவிட்டு கையேந்தினால் நாம் பெற விரும்புகிற தொழில் நுட்பமும் கௌரவமான பரிமாற்றமாக இருக்காது. 

மன்மோகனும், சிதம்பரமும் இதை சிந்திப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் மேலும் அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்திலும், நிதித் துறையிலும் திறந்து விடுவதே தீர்வு என்று கூறுகிறார்கள். கண்ணை விற்றுவிட்டு சித்திரம் வாங்கிய பிறகும் கற்பனயில் ரசிப்பதே அழகு என்கிறார்கள்.  

க.சுவாமிநாதன்