Showing posts with label AIIEA. Show all posts
Showing posts with label AIIEA. Show all posts

Friday, January 10, 2014

வலிமையான பிரதமர்... விலைவாசியை என்ன செய்வார்!!


சுவாமிநாதன்
புலியின் பற்கள் வலிமையென
புள்ளி மான்கள் போற்றுவதில்லை !
பூனையின் பாய்ச்சலை
எலிகள் பாராட்டுவதில்லை!
பல்லி நகரும் லாவகத்தை
பூச்சிகள் கூட சிலாகிப்பதில்லை!
ஐந்தறிவின் உள்ளுணர்வுகளை
ஊடகங்கள் தீர்மானிப்பதில்லை!
தெரிகிறது யார் எதிரியென்று...
ஆனால்
ஏழாம், எட்டாம் அறிவும் ஏங்குகின்றன
வலிமையான பிரதமர் வேண்டுமென்று.......!!

 
இடையில் பயணத்தில் ஒரு நடுத்தர வேலைவாய்ப்பில் இருப்பவர் ஒருவரைச் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசியவுடன் வலிமையான பிரதமர் ஒருவர்தான் இன்றைக்கு நாட்டின் தேவை என்றார். அவரோடு ரொம்ப நேரம் உரையாடிய பிறகும் நான் நிற்கும் புள்ளியையும், அவர் நிற்கும் புள்ளியையும் இணைத்து ஒரு சின்னக் கோலம் கூடப் போட முடியவில்லை. ஒரு மணிநேரம் ஆன பிறகும் ஒரு சர்வாதிகாரிதான் நம்ம நாட்டுக்குப் பொருத்தமானவர் என்று அவர் கூறிய போது எதிரெதிரே அமர்ந்தாலும் ஏதோ ஒரு மைலுக்கு அப்பால் போய்விட்ட உணர்வு ஏற்பட்டது. ஆர்வத்தோடு அவருடைய முந்தைய அரசியல் சார்புகளை விசாரித்தபோது அன்னாஹசாரே, விஜயகாந்த், துக்ளக் சோ, எம்.எஸ். உதயமூர்த்தி என்று எங்கெங்கேயோ சுற்றி பின்னர்தான் அவர் நிற்கிற புள்ளி எனக்குத் தெரிந்தது. எதையோ தேடுகிற அவரது தவிப்பு புரிந்த பிறகு புள்ளிகள் நெருங்கி சிம்பிளான கோலம் ஒன்று வரைய முடிந்தது.
இந்திய அரசியலில் இரண்டே முகவர்கள்தான் ஊடகங்களின் கேமராக் கண்களுக்கு தெரிகின்றன. வலியவர் என்று குஜராத்காரரும், இளையவர் என்று குடும்ப வம்சத்து குல விளக்கும், மூன்றாவது ஃபிரேமிற்கு தேவையில்லாமல் இடித்துக் கொண்டு வீடுகளின் வரவேற்பறைகளில் காட்சியளிக்கிறார்கள். இது தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல. இரு துருவங்களாகக் காட்டப்படும் இரண்டு பேரை திரைக்குப் பின்னிருந்து இயக்குபவர்கள் வெவ்வேறானவர்கள் அல்ல என்பதுதான் அரசியல் சூட்சமம்.
இச் சூட்சமத்திற்கான முயற்சிகள் புதியவை அல்ல. 2004ல் இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஓர் மத்திய அரசு அமை வேண்டுமென்ற நிலையேற்பட்ட போது இந்தியப் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான இராகுல் பஜாஜ், காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய அரசு உருவாக வேண்டுமென்ற கருத்தை முன்மொழிந்தது நினைவில் இருக்கலாம். இந்தியாவின் பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அது தேசத்தின் நெருக்கடியாக சித்தரிப்பது அவர்களின் உத்தியில் ஒரு வகை. அவர்களின் பொருளாதார நலனுக்கு எதிரான மாற்று அரசியல் சற்றே துளிர்விடும் என்றாலும், அவர்கள் எல்லா ஆயுதங்களுடனும் களத்திற்கு வந்து விடுவார்கள். அப்படியொரு ஆயுதங்களில் ஒன்றுதான் எஜமானர்களின் குரலாக உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள்.
அணைக்காத கரங்கள்
ஒப்புதல் உற்பத்தி(Manufacture of consent ) என்பது பன்னாட்டு மூலதனத்தின், பெரும் தொழிலகங்களின் நலன்களைக் காக்கிற சாகசம். யாரைத் தாக்குகிறார்களோ அவர்களிடமிருந்தே தாக்குவதற்கான இசைவை பெற்றுக் கொள்வதே அதன் லாவகம். பழைய திரைப்படங்களில் மனைவியைக் கணவன் ஓங்கிக் கன்னத்தில் அறைந்தாலும் 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று மனைவியை அடுத்த காட்சியில் பாடவிடுவார்கள். இப்படிப்பட்ட 'ஒப்புதல் உற்பத்தி' தற்போது வலிமையான பிரதமர் வேண்டுமென்ற புதிய பாடலாக ஒலிக்கிறது.
2013டிசம்பரில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் பொருளாதாரப் பாதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கோபம், ஊழலின் மீதான வெறுப்பு ஆகியவையே காரணமென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. காங்கிரசுக்கு மாற்று வேறு எதுவும் கண்களுக்குத் தெரியாவிட்டால் பி.ஜே.பி, வேறு எதுவும் தெரிந்தால் காங்கிரஸ்-பிஜேபி-யைத் தாண்டி ஆம் ஆத்மி என்று தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. ஆகவே மக்கள் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். மாற்று எது என்பதே கேள்வி?
நாமும் வலிமையான பிரதமர் வேண்டுமென்று நினைக்கிறோம்! ஆனால், அது தனிநபர் வலிமையல்ல. கொள்கை வலிமை. மக்களுக்கான அரசியலை அமலாக்குகிற அரசியல் உறுதி. நாலரைக்கோடி சில்லரை வணிகர்களின் வாழ்க்கையைச் சூரையாட வருகிற வால் மார்ட்டைத் தடுக்கிற வலிமை உள்ளவரா! இந்திய மக்களின் சேமிப்புகளை விழுங்க நினைக்கிற பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டுகிற வலிமை உள்ளவரா! கொம்பைச் சிலுப்பி வரும் விலைவாசி உயர்வுக் காளையை அடக்கும் வலிமை உள்ளவரா! கார்ப்பரேட் ஊழல் பேய்களை ஓட்டுகிற வலிமை உள்ளவரா! இதையெல்லாம் பற்றிப் பேசாமல் வலிமை என்றால் எது யாரைப் பாதுகாப்பதற்கு...... யாரைத் தாக்குவதற்கு..... இதுதான் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி...!!
கசப்பான காலங்கள்
கடந்த காலத்தை சற்றுத் திரும்பிப் பாருங்கள்! 2004ல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தோடு 340 பிளஸ் சீட்டுகளைக் கைப்பற்றும் என்று ஊடகங்களின் ஆரவாரத்தோடு தேர்தலைச் சந்தித்த வாஜ்பாய் ஏன் தோற்றுப் போனார்!. 1998டில்லி, இராஜஸ்தானில், பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்தது ஏன்! 1998ல் டில்லி முதல்வராக இருந்த பி.ஜே.பி-யின் சுஸ்மா சுவராஜ் வெளிச்சந்தையில் வெங்காயம் ரூ50 க்கு விற்றபோது அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கிலோ ரூ11 க்கு விற்கிறேன் என்று சில இடங்களில் மட்டும் கடைவிரித்துக் கண் துடைப்பு செய்தும் ஏன் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சுஸ்மா சுவராஜ்-ன் தோல்விச் செய்தி வந்தவுடன் நல்ல பிள்ளையாக வெங்காயம் கிலோ ரூ10க்கு இறங்கி வந்தது தனிக் கதை.  
எனவே, பொருளாதாரப் பாதை மாறாமல் விலைவாசி குறையாது. விலைவாசி குறைந்து விட்டால் பெரிய பெரிய மனிதர்களின் கல்லாப் பெட்டி நிறையாது. வலியவரோ, இளையவரோ... இவர்கள் விலைவாசி குறைப்பதற்கு என்ன மந்திரம் வைத்திருக்கிறார்கள். நமோ...நமோ... என்று முணு முணுப்பதாலோ, தலைமுறை தலைமுறையாய் வறுமையே வெளியேறு! என்று குடும்பப் பாட்டு பாடுவதாலோ விலைவாசி குறையாது. காரணம் பணவீக்கம் என்பது சாதாரண மக்களின் கிழிஞ்சு தொங்கும் பைகளிலுள்ள கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் வசதி படைத்தவர்களின் மூட்டைகளுக்கு மாற்றுகிற ஏற்பாடாகும். மோடியும், மோடியின் மூதாதையர்களும் இதை எப்படிச் செய்தார்கள் என்று பார்ப்போம்.
1998ல் பி.ஜே.பி ஆட்சி இருந்த காலத்தில்தான் உணவுப் பொருட்கள் மீதான மொத்த விலைக் குறியீட்டெண் உச்சபட்சமாக இரண்டு இலக்க சதவிகிதமான 18சதத்தைத் தாண்டியது. காய்கறிகளின் விலைகள் 110சதவீதம், வெங்காய விலை 700 சதவீதம் என ஏறியது. 2000ம் ஆண்டில் அதே வாஜ்பாய் ஆட்சியில்தான் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ146ல் இருந்து ரூ 232க்கு ஏறியது. எரிபொருள், மின்சாரத்தின் விலைகள் 28சதவீதம் உயர்ந்ததென்பது 2001லிருந்து 2010 வரையிலான பத்தாண்டிலுங் கூட நடக்காத விலைவாசி உயர்வு, இதற்கெல்லாம் காரணம் பி.ஜே.பி அரசு  முன்னெடுத்த பொருளாதார முடிவுகள்தான். இன்று காங்கிரஸ் ஆட்சியில் விலை உயர்வுக்கு பிள்ளையார் சுழி (விலைவாசி விநாயகர் என்று சூடம் காண்பித்தாலும் காண்பிப்பார்கள்) போட்டவர்கள் மோடியின் மூதாதையர்கள்தான்.
நடிப்புச் சுதேசிகள்
ஒன்று, தாராளமான இறக்குமதியைக் கட்டவிழ்த்து விட்டது. 1991ல் இந்தியாவின் 3300 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் உண்டு. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சாலைகள் தோறும் சுதேசி சோப் எது? பிளேடு எது? என்று நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் ஏப்ரல்-1 2000ல் 714 பொருட்கள் மீதான இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நீக்கினார்கள். ஏப்ரல்-1, 2001ல் இன்னும் 715 பொருட்கள் மீதான அளவுக் கட்டுப்பாடுகளையும் நீக்கினார்கள். இதற்காக அவர்கள் தெரிவு செய்த தேதி மக்களைக் கேலி செய்வதற்கா என்று தெரியவில்லை. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்
உப்பென்றும், சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி!கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி
இரண்டாவது பெட்ரோலிய பொருட்கள் மீதான மையப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை(Administered Price Mechanism ) நீக்கிய புண்ணியவான்களும் இவர்கள்தான். 1989ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ8 ஆக இருந்தது. இன்று அது ரூ74க்கு உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு கிரின் சிக்னல் போட்டவர்கள் பி.ஜே.பி காரர்கள்தான்.15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச விலைகள் உயர்வைக் கணக்கிற் கொண்டு தானாகவே விலை மாறும் நடைமுறையைக் கொண்டு வந்தவர்கள். திருடிவிட்டு ஓடுபவனே திருடன்... திருடன்.. என்று கத்திக் கொண்டு ஓடுவது போல இன்று பெட்ரோல் விலை உயர்வுக்கு பி.ஜே.பி கண்ணீர் வடிப்பதும் நகைச்சுவைதான்.
மூன்றாவது, இறக்குமதி விலைச் சமன்பாடு (Import Price Parity ) என்ற நூதனமான விலை உயர்வை 2002ல் கண்டு பிடித்தவர்களும் இவர்கள்தான். இறக்குமதி ஆகாமல் உள்நாட்டில் உற்பத்தியாகிற பெட்ரோலுக்கும் இறக்குமதியானால் போடுகிற வரிகள், சரக்குக் கட்டணம், இன்சூரன்ஸ் என ஆகிய செலவுகளைச் சேர்த்து விலை நிர்ணயம் செய்த விபரீதத்தை அரங்கேற்றினார்கள். ஆகாத செலவுக்கு பில் போட்ட ஃப்ராடுத்தனத்தை எதற்காகச் செய்தார்கள் தெரியுமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்றதால் தனியார் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கூட ண்டாமா! பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் தனியார் பங்குகள் எவ்வளவு பாருங்களேன்
இந்தியன் ஆயில் காப்பரேசன்21 சதவீதம்
இந்துஸ்தான்  பெட்ராலியம்-49 சதவீதம்
பாரத் பெட்ரோலியம்-45 சதவீதம்
.என்.ஜி.சி-31 சதவீதம்
கெயில்-43 சதவீதம்
ஆயில் இந்தியா- 22 சதவீதம்
இவர்களின் லாப பங்கிற்காக அரசு காட்டிய கருணை இது. இது தவிர ரிலையன்ஸ் அம்பானி போன்றவர்களின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் லாபம் பெருக வேண்டாமா! ஆகாத செலவுக்கு பில் போட்டார்கள் வாஜ்பாயும், அத்வானியும்.பிள்ளையார் பக்தர்கள் அல்லவா! கடைத் தேங்காயை எடுத்துச் சிதறுகாய் போட்டார்கள்.
இப்படி அம்பானிக்கு கருணை காட்டிய இவர்கள் அப்பாவி விவசாயிகளுக்கு இறக்குமதி விலைச் சமன்பாட்டை கொண்டு வரமுடியுமா! பருத்தி சர்வதேசச் சந்தையில் ரூ 12000 விற்றபோது, இந்தியாவில் விவசாயிகளுக்கு ரூ 3000ம் தான் கிடைத்தது. அம்பானிக்கு வித்தியாசத்தை தந்தவர்கள், விவசாயிகளுக்கு வித்தியாசமாய் எதைத் தந்தார்கள் தெரியுமா! இரண்டு லட்சம் தூக்குக் கயிறுகள். இதில் ராமன், கணேசன், சர்தார், முபாரக், பீட்டர் என்று எந்த வித்தியாசமும் இல்லை.
நான்காவது, அத்தியாவசிய சரக்குகள் சட்டத்தை தளர்த்தி 50,000 டன்கள் வரை பெரும் வியாபாரிகள் பதுக்குவதை சட்டப் பூர்வமாக்கியதுதான். வாஜ்பாயின் வார்த்தைகளில் 'வியாபாரிகள் பதுக்குவது நமது நாட்டின் சட்டத்தின் படி குற்றமல்ல'. உளுந்தம் பருப்பு கிலோ ரூ 30ல் இருந்து ரூ 70க்கும், விளக்கெண்ணெய் ரூ 40ல் இருந்து ரூ80 க்கும், வெங்காயம் ரூ 4ல் இருந்து ரூ 60க்கும் ஏறியது. இந்த முடிவு எடுத்த பிறகுதான். சர்க்கரை போன்ற ரேசன் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டையும் தளர்த்தினார்கள்.
இதே வியாபாரிகளுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி வால்மார்ட்டுக்கு கண்ணசைவு காட்டுகிற அளவுக்கும் பிற்காலத்தில் போனது பி.ஜே.பி-யின் வளர்ச்சி என்பது வேறு கதை. எஜமானனை மாற்றாமல் வாலாட்டுகிற நன்றியுள்ள பிராணிகள் அல்ல முதலாளித்துவக் கட்சிகள். வளர்ச்சிக் கேற்ப வாலைக் குழைத்து ஆட்டப் பழகிக் கொண்டது பி.ஜே.பி.
ஐந்தாவது முன்பேர வர்த்தகச் சூதாட்டத்தை அமலாக்கியது பி.ஜே.பி தான். சரக்குகள் கைமாறாமலேயே வணிகம் நடந்தேறுவதும். அதன் மூலம் செயற்கையாய் விலை ஏறுகிற புதிய மோசடி அரங்கேறியதும் இவர்களின் காலத்தில்தான். இந்தியப் பட்ஜெட் தொகையைப் போன்று எட்டு மடங்கு, பத்து மடங்கு வரை முன்பேர வர்த்தகச் சந்தையின் நடவடிக்கை மதிப்புகள் போனதென்பது இச் சூதாட்டம் எவ்வளவு உச்சத்தைத் தொட்டதென்பதற்கு அடையாளம். பாரம்பரிபதுக்கலையும் ஊக்குவித்து நவீன பதுக்கலுக்கும் வழிவகுத்த இவர்களின் அடுத்த அம்பும் சாமானியனின் வயிற்றை மிகச் சரியாகவே குறி வைத்தது.
ஆறாவது , பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக காப்புரிமைச் சட்டத்தை திருத்த முனைந்தது. ஜெர்மனியின் பேயர் நிறுவனம் இந்தியாவில் 2லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த கேன்சர் மருந்துகள் தற்போது ரூ 10,000 க்கும் ரூ20,000 க்கும் உள்நாட்டில் கிடைக்கிறது. பி.ஜே.பி கொண்டு வந்த காப்புரிமைச் சட்டத்திருத்தம் அப்படியே நிறைவேற்றப் பட்டிருந்தால் பரிதாப நோயாளிகள் பல லட்சங்களை இன்னும் செலவழிக்க வேண்டியது இருந்திருக்கும். இடதுசாரிகள் முன்மொழிந்து நிறைவேறிய திருத்தமே சாதாரண மக்களின் உயிர் வாழும் உரிமைகளைத் தக்க வைத்துள்ளது.

ஆள் மாறாட்டமல்ல தீர்வு
பி.ஜே.பி-யின் ஆறுமுகங்கள் மட்டுமே இவை. இன்னும் பல்லாயிரம் முகங்களைக் காட்டக் காத்திருக்கிறது பி.ஜே.பி. வலிமையான பிரதமர் இதையெல்லாம் மாற்றுவாரா! விலைவாசிக்கு கடிவாளம் போடுவாரா! உத்தரகாண்டு வெள்ளத்தில் 30,000 பேரை ஒரே நாளில் காப்பாற்றி அனுமார் போல கரை சேர்த்ததாகக் கதைவிட்டார்களே! கோடானு கோடி மக்களுக்கும் அது போன்ற கதைகளைத் தயார் செய்வார்களா!
பாதை மாறாமல் தீர்வுகள் இல்லை! தேசத்தின் தேவை வேறு பிரதமர்அல்ல. வேறு பாதை !
இரயில் பயணத்தில் என்னுடன் வந்தவர் விவாதம் எங்கெங்கோ திசைமாறி போய்க் கடைசியில் சொன்னார். "ஆமா சார்! உடம்புக்கு ஏதாவது வந்துவிடக்கூடாது என்று பதட்டமாக இருக்கிறது தனியார் மருத்துவமனைக்கு அழுதே வாழ்நாள் சேமிப்பெல்லாம் போய்விடும்" என்று... நானும் சொன்னேன் "தேசத்திற்கும் ஏதும் வரக்கூடாதது வந்து விடக் கூடாதே என்ற பயம் நமக்குத் தேவைப்படுகிறது" என்று....

நன்றி: 'இளைஞர் முழக்கம்'- ஜனவரி 2014

Tuesday, September 3, 2013

தலை குப்புற வீழ்வது ரூபாய் மட்டுமல்ல.. மக்களின் வாழ்க்கையும்தான்

சிதம்பரத்தை ருபாய் தோற்கடித்துவிட்டது என்று ஆகஸ்ட் 29, 2013 அன்று ஒரு செய்தித்தாள் எழுதியது. சிதம்பரம் வருகிற செப்டம்பர் 16, 2013 அன்று 68 வயதைத் தொடுகிறாராம். ஆனால் ருபாய் மதிப்பு வீழ்ந்து வீழ்ந்து ஆகஸ்ட் 28 அன்றே 68.75 ஐத் தொட்டுவிட்டது. இப்படி ருபாய் மதிப்பு வீழ்வது என்றால் என்ன? அதற்கும் சாதாரண விவசாயிகளுக்கும்,தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல! நமது வாழ்க்கை அனுபவமும், வாங்குகிற அடியுமே நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்க வைக்கும்.குப்புற வீழ்வது ரூபாயானாலும் காயம் சாதாரண மக்களுக்குத்தான்.

காயமே சிறந்த ஆசான் 

ஆகஸ்ட் 31 அன்றே பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் 2.99 ஏறிவிட்டது. டீசல் விலை 61 பைசா கூடிவிட்டது. மாதா மாதம் டீசலுக்கு 50 பைசா கூட்டப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் சேர்மன் ஏ.கே.சிங் செப் 2 'இந்து' ஆங்கில நாளிதழில் தந்துள்ள நேர்காணலைப் பாருங்கள்.ருபாய் மதிப்பு 1 ருபாய் மதிப்பு சரிந்தால் டீசல் விலையை லிட்டருக்கு 90 பைசா ஏற்றவேண்டுமாம். என்ன அர்த்தம்? 50 பைசா உயர்வு போதாது என்கிறார். 

உர விலை ஏறியுள்ளது. விவசாயிக்கு ஏற்கனவே கைக்கும் எட்டுவதில்லை வாய்க்கும் எட்டுவதில்லை. நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சரே நவம்பர் 30, 2012 ல் சொன்ன தகவலைப் பாருங்கள். "2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நெல்லின் உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 146 கூடியது. ஆனால் விவசாயிக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே அதிகரித்தது. 2011-13 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கோதுமை உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ 171 கூடியுள்ளது. ஆனால் விவசாயிக்கான குறித்த பட்ச ஆதரவு விலையோ ரூ 65 தான் கூடியிருக்கிறது." இப்போது உர விலை இன்னும் இன்னும் கூடினால் என்ன ஆவது! கட்டியிருக்கிற கோவணத்திற்கும் ஆபத்து அல்லவா!

இதுதவிர பாமாயில், குளியல் சோப்பு, சலவை சோப்பு, மருந்துகள், இரும்பு என எல்லா விலைகளும் கூடியுள்ளன. ஏதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களின் விலைகள்தான் என்பதல்ல .பெட்ரோல் விலை கூடினால் போக்குவரத்து செலவினம் கூடும். வண்டியில் சவாரி செய்கிற எல்லா சரக்குகளின் விலைகளும் கூடும். 

எனவே ருபாய் மதிப்பு வீழ்கிற பொருளாதாரம் புரிகிறதோ இல்லையோ இவ் வீழ்ச்சி தங்களது வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வீழ்ச்சி எப்படி !

இப்போது ஒரு டாலருக்கு ரூ 68.75 ஆக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரணாப் முகர்ஜி இடம் இருந்து நிதியமைச்சர் பொறுப்பு ஏற்கும் போது ரூ 55 ஆக இருந்தது. 
சில பேர் ருபாய் மதிப்பு கூடுவது போல இருக்கிறதே என்று குழம்புகிறார்கள். ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாலர் பெறுமான உரத்தை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்றால்  55 ருபாய் கொடுத்து வந்தோம். ஆனால் இன்று 1 டாலர் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் ரூ 68.75 தர வேண்டியுள்ளது. வேறு மாதிரி சொல்வதென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் தந்து இறக்குமதி செய்த சரக்குகளை எல்லாம் ஒன்னே கால் ருபாய் கொடுத்து இப்போது வாங்க வேண்டியுள்ளது. காசுக்கு மரியாதை குறைந்துள்ளது இல்லையா! இதைத்தான் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பு வீழ்ச்சி என்கிறோம். 

ஏன் டாலருக்கு எதிராக ருபாய் மதிப்பை பார்க்க வேண்டியிருக்கிறது என்றால் டாலர்தான் உலகக் கரன்சியாக இன்றைக்கு உள்ளது. உங்கள் ரூபாயைக் கொடுத்து உலகச் சந்தையில் சரக்கு வாங்க முடியாது. இந்தியாவிற்கு தேவையான பெட்ரோல்,டீசலில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.
தங்கம் போன்ற ஆடம்பர பொருட்களும் நிறைய இறக்குமதி ஆகின்றன. இதற்கெல்லாம் டாலர் தேவைப்படுகிறது. ஒரு பொருளுக்கு கிராக்கி கூடும்போது அதன் விலை கூடும் அல்லவா.
அதனால் டாலர் விலை கூடுகிறது. ருபாய் விலை வீழ்கிறது. நாணயப் பரிவர்த்தனைகளும் சரக்குகள் ஆகிவிட்டன. 

தனிக்காட்டு ராஜா 

இப்படி அமெரிக்காவின் டாலர் தனிக்காட்டு ராஜா மாதிரி இருப்பதற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஒரு டாலருக்கு 68 ரூபாய்க்கு பதிலாக, ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்று இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! சுகமான கற்பனை மட்டுமல்ல் இது. 1947 க்கு முன்பு ஒரு டாலருக்கு ஒரு ருபாய் என்ற நிலைமை இருந்திருக்கிறது. ஏன் 1910 ல் ஒரு டாலருக்கு 10 பைசா என்று கூட இருந்திருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரத்தில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் அமெரிக்காவிற்கு கிடைத்த செல்வாக்கு, சோஷலிச முகாமிற்கு 80 களின் இறுதியில் ஏற்பட்ட பின்னடைவு, மாற்று நாணயமாக வளர்ந்த யுரோ சந்தித்துள்ள பின்னடைவு. டாலரின் மேலாதிக்கத்திற்கு சவால் விட்ட சதாம் உசைன் போன்றவர்களை ராணுவ ரீதியாக ஒடுக்கியது.. இப்படி நிறைய விசயங்களைப் பேசினால்தான் டாலரின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும். லத்தின் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றுப் பாதை நோக்கி இந்திய போன்ற நாடுகள் சிந்திக்க மறுப்பதும் டாலரின் பலமாகும். பெட்ரோலுக்கு ஒரே தடவையில் மூன்று ரூபாய் அதிகமாக அழுவதற்கும், உலக அரசியலுக்கும் இருக்கிற தொடர்பை 
விளக்குவதற்கு பக்கங்கள் போதாது.

சரி! எங்கேயோ போய் விட்டோம்! இப்போது அண்மைக் காலமாக டாலர் ஏறுமுகமாக இருப்பதற்கு என்ன காரணம்? அமெரிக்க பொருளாதாரம் சிறிது மீட்சி அடைந்திருப்பதால் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் பங்குச் சந்தையை விட்டு டாலர் வெளியேறி அமெரிக்காவிற்கு திரும்புகிறது; அமெரிக்காவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வட்டி விகிதங்களை அதிகரிக்கின்றது ஆகியன உடனடிக் காரணங்கள் என்பது உண்மையே. ஆனால் இப்படிப்பட்ட சர்வதேசக் காரணிகள் இவ்வளவு நம்மை பாதிப்பது ஏன்? இதற்கான உள்நாட்டுக் காரணங்களை உள்ளே போய் ஆய்வு செய்து உண்மையை பேச மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தயாராக இல்லை. 
  
இறக்குமதியை திறந்துவிட்டது யார்!

நடப்புக் கணக்கு பற்றாக்குறை பற்றி கண்ணீர் வடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, அதைக் குறைக்கவேண்டும் என்கிறார்கள். தங்கம் வாங்குவதைக் குறையுங்கள் என்று சிதம்பரம் வேண்டுகோள் கொடுக்கிறார். 

ஆனால் இப்படி இறக்குமதி பெருகியதற்கு யார் காரணம்! 1991 ல் 3330 பொருட்கள் மீது இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகள் (Quantitative Restrictions) இருந்தன. அவை படிப்படியாக கைவிடப்பட்டு 3300 பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. கவர்ச்சி கரமான ஆடம்பரப் பொருட்கள் வருவதை வளர்ச்சி என்றும் பறை சாற்றினார்கள்.

இன்று இந்தியா முழுவதும் உள்ள அரைக் கோடிக்கும் அதிகமான கைநெசவாளர்கள் வாடுவது ஏன்! ஏன் அவர்கள் தொழிலை விட்டு ஓடுகிறார்கள்? ஆயத்த ஆடைகளுக்கு ஜீரோ இறக்குமதி வரிகள் என்று அறிவித்தது யார்! 

உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்கிற அளவுக்குகூட இறக்குமதி வரிச் சுவர்களை எழுப்பாமல் பல பொருட்களை உள்ளே அனுமதித்தது யார்! ரூ 58000 கோடிகள் வரை தங்க இறக்குமதிக்கு மட்டும் வரிச் சலுகைகளை கடந்த ஆண்டு வரை தந்து ஊக்குவித்தது யார்!

இப்படி இறக்குமதிகளை மானாவாரியாகத் திறந்துவிட்டு இப்போது டாலர் தேவை... டாலர் தேவை.. என்று அலைந்தால் என்ன செய்வது! 

கேன்சருக்கு அனால்ஜினா 

கேன்சர் நோயாளிகளுக்கு பக்க விளைவாக காய்ச்சல் வரலாம். ஆகையால் அனால்ஜின் குணப்படுத்திவிடுமா! ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏற்றுவது, இறக்குவது எல்லாம் இப்படி காய்ச்சல் மாத்திரை கொடுப்பது மாதிரிதான்.தங்க இறக்குமதி வரியை சிதம்பரம் கூட்டினாலும் இறக்குமதி குறையவில்லையே ஏன்! மக்கள் பேங்குகளில் போடுகிற பணத்திற்கு பணவீக்கத்தால் மரியாதை போவதால் பயந்து போய் தங்க முதலீடுகளுக்கு ஓடுகிறார்கள். 

ருபாய் மதிப்பு குறைந்தால் இந்திய ஏற்றுமதியாளருக்கு லாபம் வரவேண்டும. அதாவது வருகிறதா! காரணம், உலகச் சந்தையில் கிராக்கி குறைந்திருப்பதால் விற்க முடியவில்லை. வளர்ந்த நாடுகள் பேரம் பேசி விலையைக் குறைத்து விடுகின்றன. ஏற்றுமதியாளர்கள் முன்பேர வர்த்தகத்தில் பதிந்ததால் இப்போதைய விலை கிடைப்பதில்லை. முன்னால் போனாலும் உதை, பின்னால் போனாலும் உதை என்பது மாதிரி இறக்குமதி விலை கூடுகிறது. ஏற்றுமதிக்கோ விலை கிடைப்பதில்லை. 
  
உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றை அதிகரிக்காமல் என்ன ததிங்கனத்தோம் போட்டாலும் தீர்வு கிடைக்காது. உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விலை போகாது என்பது பழமொழி. உலகமயத்திற்கும் அது பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தாமல் வெளிநாட்டுச் சந்தையின் பயன்களை அனுபவிக்க முடியாது. இது உலகமயம் தந்துள்ள அனுபவம்.

'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்பதை சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியொரு வளம் இங்கே இல்லையென்றால், தொழில்நுட்பம் இல்லையென்றால் வெளிநாட்டில் பெறலாம். ஆனால் இருக்கிற வளத்தை காவுகொடுத்துவிட்டு கையேந்தினால் நாம் பெற விரும்புகிற தொழில் நுட்பமும் கௌரவமான பரிமாற்றமாக இருக்காது. 

மன்மோகனும், சிதம்பரமும் இதை சிந்திப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் மேலும் அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்திலும், நிதித் துறையிலும் திறந்து விடுவதே தீர்வு என்று கூறுகிறார்கள். கண்ணை விற்றுவிட்டு சித்திரம் வாங்கிய பிறகும் கற்பனயில் ரசிப்பதே அழகு என்கிறார்கள்.  

க.சுவாமிநாதன் 

Friday, August 16, 2013

SHOCK...ஷாக்

இந்து 16.8.2013 இதழின் முதல் பக்க செய்தியொன்றில்  வாராக்கடன்கள் காரணமாக பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ள இழப்புகள் குறித்து சி.பி.ஐ விசாரணை துவங்கியிருப்பதை செய்தியாளர் தேவேஷ் கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

அதில் மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் மதிப்பு ஐந்து லட்சம் கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகை 2 லட்சம் கோடிகளாக இருந்தது. மொத்த கடன்களில் 31.3.2009 ல் 4.87 சதவீதமாக இருந்த மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் 31.3.2012 ல் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய கடன்களில்தான் மிகப்பெரும் தொழிலதிபர்கள் புகுந்து விளையாடியிருப்பதாக புகார். 

அண்மையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாராக்கடன் வைத்துள்ள முதல் பெரிய 30 கணக்குகளை நெருக்கி வசூலித்தாலே அவ்வங்கிகளின் பாலன்ஸ் ஷீட்டுகளை தேற்றிவிடலாம் என்று கூறியதை இச் செய்தியோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம்.

SHOCK... ஷாக்...



இந்து  16.8.2013 நாளிதழின் நடுப்பக்க கட்டுரை - அரசு காச நோய் கட்டுப்பாடு திட்டம் பற்றியது- டி. ஜேக்கப் ஜான் , முன்னாள் அகில இந்தியத் தலைவர், இந்திய குழந்தை மருத்துவர் கழகம்- அதில் உள்ள இரண்டு  தகவல்கள்:

1 ) உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உள்ள இந்தியாவில் உலகக் காச நோயாளிகளில் 26 பேர் உள்ளனர்.

2) இந்திய பொருளாதாரத்திற்கு காச நோய் காரணமாக ஏற்படும் இழப்பு 23.7 பில்லியன் டாலர்கள். (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 142200 கோடிகள்). ஆனால் அரசின் புதிய தேசிய காச நோய் கட்டுப்பாடு திட்டத்திற்கான  ( REVISED NATIONAL TB CONTROL PROGRAMME- RNTCP) செலவினம் 200 மில்லியன் டாலர் மட்டுமே. அதாவது இந்திய ருபாய் மதிப்பில் ரூ 1200 கோடிதான்.

Wednesday, September 26, 2012


ஓரம் போ ! வால்மார்ட் வண்டி வருது !
க.சுவாமிநாதன் 

தொலைக் காட்சிகளில் மன்மோகன் சிங் சில்லறை வணிகத்தில் அந்நிய  முதலீடு அனுமதிக்கப்படுவது பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுத்துவிட்டார். பிரதமர், பெரிய பொருளாதார நிபுணர், அவருக்கு தெரியாததா? என்று படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் சில பேர் எந்தச் சம்பளமும் வாங்காமல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள். ஆனால் மன்மோகன்சிங் வார்த்தைகளில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்று அவரின் இணை பிரியாத சகா, உலக வங்கி கொடுத்த உறவுக் காரர் மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் கேட்டுப் பார்ப்போமா! 

2002 டிசம்பர் 19 அன்று இதே மன்மோகன்சிங் (நாம் இதை சொல்லாவிட்டால் அது அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று கூட சொல்லுவார்கள்) நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர். அப்போது சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என்று பேசியிருக்கிறார். பிறகு மும்பை வர்த்தகர் சங்கத்திற்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கடமை உணர்வோடு கடிதமும் எழுதியுள்ளார். இவர் மட்டுமல்ல 2001 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா தாஸ் முன்சி சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு "தேச விரோதம்" என்று முழங்கியிருக்கிறார். இன்றைய அமைச்சர் கமல்நாத்தும் உணர்ச்சி பொங்க எதிர்த்திருக்கிறார். மன்மோகன் சிங்கே இப்படி பேசி இருக்கிறாரே ? என்று செய்தியாளர்கள் அலுவாலியாவிடம் கேட்டபோது " ஒவ்வொரு ஆளும் எப்போது என்ன பேசுகிறார் என்று என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வர இயலாது " என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை. வடிவேல் பாணியில் இது வேற வாய் என்றுதானே அலுவாலியா சொல்லுகிறார். இன்னும் பத்து வருசம் கழித்து எந்த வாய் பேசுமோ நமக்கு தெரியாது.

யாருக்கு லாபம்! 

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம்! யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும்? ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும்! இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும்! ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே! அதனால்தான் சிறு வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.

இது என்ன ஜனநாயகம்! 

போன நவம்பர் 2011 ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன! ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே!
இப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது! ஆளுங்கட்சியை உள்ளே இருந்து ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது. இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை  கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் " சிறுவணிகத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப் பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல"
இப்படி யாரையுமே ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன ஜனநாயகம்! 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது. 

உலக அனுபவம் என்ன ?

உலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங் அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி  இருக்கிற விளைவுகளை பார்க்க வேண்டாமா? தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது "இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் "இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது!" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா? பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை. 

விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் ?

இரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன? அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன? இதோ பிரிட்டன் ராயல் பால் உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம் கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம் 2008 இல் "மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன. நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன" என்று செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை. 

நுகர்வோருக்கும் ஆப்பு 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி "கவனமாக இருங்கள். சில்லறை வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது சாமானிய மக்களுக்கு நல்லதல்ல" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி - 2012 அறிக்கையின் படி "பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள் ஏற்றப்படுகின்றன" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன் ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன? ஆனால் அலுவாலியா சொல்லுகிறார். இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான். ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம். இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம். இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான் நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்?

கூடாரத்திற்குள் ஒட்டகம்

10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான் தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே கூடாரத்திற்க்குள்  மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும், விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில் தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள் போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும், மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும் மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால் அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம் வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.
ஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.

ஓரம் போகப் போகிறோமா! ஓங்கிக் குரல் கொடுக்கப் போகிறோமா!