* வறுமை என்றாலே நினைவுக்கு வருவது ஒரிசாவின் காலகண்டி மாவட்டம்.அங்கு மகாத்மாகாந்தி தேசிய கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைந்தபட்சக் கூலியான ரூ 90 மறுக்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் ( 19 .8 . 2010 ) செய்திகள் வந்தன. கரும்பின் சக்கை கூடக் கிடைக்காத பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.
* இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 1149 பேர். இன்போசிஸ் நிறுவனத்தில் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 144 பேர். இவர்கள் கூட நடுக் கரும்புக்காரர்கள்தான்.
* இந்தியாவில் அதிகமான வருமானம் பெறுகிறவர் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் ஜிண்டால்தான். ஆண்டு வருமானம் 69.75 கோடிகள். இதை விடுங்கள்! அமெரிக்காவில் அதிக வருமானம் வாங்குபவர் லிபர்ட்டி மீடியாவின் கிரகரி பி. மாபி என்கிற தலைமை நிர்வாகி. ஆண்டு வருமானம் ரூ 393 கோடிகள். ஒரு நாளைக்கு ஒரு கோடியே எட்டு லட்சம். அடிக் கரும்புக்காரர்கள் யாரென்று தெரிகிறதா?
இளநீருக்கு ஆபத்து
இளநீருக்கு வந்துவிட்டது ஆபத்து. கொக்க கோலாவும், பெப்சியும் பெரும் முதலீடுகளோடு இளநீர்ச் சந்தைகளில் குதித்துள்ளனர்.உலகில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இளநீர் காய்ப்பது இந்தியாவில்தானாம். பிரேசிலின் அமாகோகோ நிறுவனத்தை பெப்சி வாங்கியிருக்கிறது. 30 நாட்களுக்கு இளநீரை கெட்டுப்போகாமல் வைத்திருக்கிற தொழில் நுட்பம் ரூ 3 லட்சத்திற்கு கிடைக்கிறது. பாக்கெட்டுகளிலும், அலுமினிய கேன்களிலும் இளநீரை அடிக்கிற பரிசோதனைகள் மைசூரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் நடந்தேறி வருகின்றன.
சில நடுத்தர கம்பெனிகளும் வணிகத்தில் குதிக்கலாம்.ரோட்டோரங்களில் ட்ரை சைக்கிளில் இளநீர்க் காய்களை அடுக்கிக் கொண்டு அரிவாளோடு அண்ணே..அக்கா..என்று கூவி விற்பவர்களுக்கு ஆபத்துதான்!
கொசுறு
* இன்போசிஸ் நிறுவனத்தில் 2010 - 11 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5311 ஊழியர் அதிகமாகியுள்ளனர். இது நிகரக் கூடுதலே ஆகும். 11067 பேர் புதிய நியமனம் பெற்றுள்ளனர். 5756 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். ஒரு காலாண்டில் எவ்வளவு கூட்டல், கழித்தல் பாருங்கள்!
* கார்களின் பின்பார்வைக் கண்ணாடி ( REAR VIEW MIRROR ) விற்பனையில் மட்டும் ஆண்டிற்கு உலகம் முழுவதிலும் ரூ 32000 கோடிகள் புழங்குகின்றன. இதில் இன்று 22 சதவீதம் சந்தைப் பங்கை வைத்துள்ள மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் விற்பனை பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ 100 கோடிகள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ 1000 கோடிகள். 2010 ல் 6900 கோடிகள். 2015 ல் ரூ 25000 கோடிகளைத் தொடுமாம். கண்ணாடி வாங்குபவர்கள் பின்னோக்கிப் பார்த்தாலும் சந்தை வாகனம் ஜாம் ஜாமென்று முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. பஞ்சதந்திரம் கமல் டயலாக் போல பின்னாடி..கண்ணாடி..முன்னாடி...
சூடான செய்தி
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு அதற்கான சட்ட வரைவைப் பரிசீலிக்கிற திரு யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச்சக நிலை குழு ஒப்புதல் அளிக்காது என டைம்ஸ் ஆப் இந்தியா ( 13 .1 .2011 ) செய்தி வெளியிட்டுள்ளது. வாய்க்கு பொங்கல் தந்த மாதிரி.. நல்லது நடக்கட்டும்!
No comments:
Post a Comment