Friday, January 10, 2014

பொருளியல் அரங்கம்- தீக்கதிர்- ஜனவரி 4,2014


க.சுவாமிநாதன்
 
சிங்கப்பூரின்`செல்’ குடும்பங்கள்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கை தற்போதுள்ள 54 லட்சம் மக்கள் தொகையை 2030க்குள்ளாக 69 லட்சமாக உயர்த்துவதென முடிவு செய்துள்ளது, இதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை ஒவ்வொரு ஆண்டும் 15,000 லிருந்து 20,000 வரை அதிகரிப்பதெனவும் அறிவித்துள்ளது. தற்போதைய 54 லட்சம் மக்களில் 15,50,000 பேர் - அதாவது சுமார் 29 சதம் புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள்தானாம். சிங்கப்பூரின் தேசிய தனிநபர் சராசரி வருமானம் 42,930 டாலர்கள் எனில் கீழ்மட்டத் தொழிலாளர்களில் அதில் 6 ல் ஒரு பங்கையே சராசரியாக பெறுகிறார்கள். மருத்துவம், குடியிருப்பு வசதிகளெல்லாம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மிக அரிது. பெரும்பாலும் தனித்து வாழும் இவர்கள் செல்போன், இன்டர்நெட் மூலமாகவே குடும்ப உறவுகளை பராமரித்துக் கொள்கிறார்கள்.

கரூர் வைஸ்யாவில் அந்நிய முதலீடு

கரூர் வைஸ்யா வங்கியில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் (குஐஐ) பங்கை 40 சதம் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. தற்போது தனியார் வங்கிகளில் 49 சதம் வரை ‘ஆட்டோமேடிக் ஒப்புதல் வழியிலும்‘ அதற்கு மேல் 74 சதம் வரை ‘அரசின் ஒப்புதல் வழியிலும்‘ அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படலாம் என்ற வரம்புகள் அமலில் இருப்பதால் அவை மீறப்படாமலிருப்பதைக் கண்காணித்துக் கொள்ளவும் கரூர் வைஸ்யா வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 சதத்திற்கும் அதிகமான அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எந்தவொரு தனியார் வங்கியிலும் பங்குகள் வாங்கினால் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தர வேண்டுமென்பது தற்போதுள்ள விதிமுறையாகும்.விருந்தாளிகள் வீட்டிற்கு சொல்லிவிட்டு வருவது போல வருகிறது அந்நிய முதலீடு.

தள்ளாடும் பங்கு சந்தை

2013ல் ஐபிஓ (INITIAL PUBLIC OFFER ) எனப்படும் கம்பெனிகளின் துவக்க பங்கு வெளியீடுகள் ரூ.1619 கோடிகளையே திரட்டியுள்ளன. இது கடந்த 12 ஆண்டுகளில் காணப்படாத பெரும் சரிவாகும்.2001ல் ரூ.296 கோடிகள் திரட்டப்பட்ட பின்னர் காணப்படும் மிகச் சோர்வான பங்குச் சந்தை ஐபிஓ திரட்டல் இது ஆகும். 2010ல் இத்தொகை ரூ.37,535 கோடிகளாகவும், 2012ல் ரூ.6835 கோடிகளாகவும் இருந்தது.இரண்டாம் நிலைச் சந்தையில் ((Secondary Market) ) நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்களிடம் ஆர்வமின்மை ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.‘ப்ரைம் டேட்டாபேஸ்’ என்ற நிறுவனம் ஐபிஓ சந்தை மீட்சியடைவதற்கான அறிகுறிகள் அண்மையில் தெரியவில்லை என கணித்துள்ளது.

வால்மார்ட்டின் கலப்படம்

உலகின் மிகப்பெரிய சில்லரை வணிக நிறுவனமான வால்மார்ட் தனது சீன கடைகளிலிருந்து ‘கழுதை’ மாமிச உணவை திரும்பப் பெறுவதென முடிவு செய்துள்ளது.சீனாவின் ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.64 லட்சம் கோடி) உணவு மற்றும் பலசரக்கு சந்தையில் ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் வால்மார்ட்டின் சந்தைப் பங்கு 7.5 சதத்தில் இருந்து 5.2 சதம் வரை விழுந்திருக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.96 லட்சம் கோடிகள்) வளரப் போகும் சீனச் சில்லரை வணிகச் சந்தையில் வால்மார்ட்டின் வாய்ப்புகளை கழுதைக் கறி விவகாரம் பாதிக்குமென செய்திகள் கூறுகின்றன.கழுதைக் கறி என்று சொல்லி வேறு பிராணிகளின் மாமிசம் கலக்கப்படுவதாக னுசூஹ சோதனையில் தெரியவந்துள்ளது.பிரான்சின் கேரிஃபோர், மெக்டோனால்டு, கேஃஎப்சி போன்ற நிறுவனங்களும் உணவுத் தர சோதனையின் சந்தேக லென்சுக்குள் வந்துள்ளனவாம்.

கொசுறு......

ஷோலே திரைப்படம்38 ஆண்டுகளுக்குப் பின்னர் 3டி படமாக வெள்ளியன்று (3.1.2014) ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.15 கோடி செலவில் வெளி வந்த மெகா பட்ஜெட் படம் 25 கோடி செலவில் தற்போது முப்பரிமாண படமாக ஆக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment